தென்றலாய் இரு… தெய்வமாய் வணங்குகிறோம்

#தென்றலாய் இரு…
தெய்வமாய் வணங்குகிறோம்

உயிர் சுமக்கும் காற்றே
உடலை நகர்த்துகிறாய்
கண்களுக்குப் புலப்படாமல்…!

உனக்குக் கோபம் உண்டா..?
இல்லை என்று சொல்வதற்கில்லை..

தூசிகளை விழிகளுக்குள்
அப்பிவிட்டு
கண்களைக் கசக்கும் நேரத்தில்
காத தூரம் சென்றிருக்கும்
உன்னில்தான்
எப்படியெல்லாமோ
கோபத்தின் அடையாளங்கள்..!

புயலாய் மாறி
குடிசைகளை வேட்டையாடி
இருக்கிறாய்

வெறி கொண்டுமரங்களை
வேரோடு சாய்த்திருக்கிறாய்…

மின்கம்பிகளை
மின்னல் வேகத்தில்
வெட்டியுமிருக்கிறாய்..!

எல்லா அழிவுகளிலும்
கோபத்தின் சாயல்கள்
இல்லாமல் இல்லை...

சேதங்களைச் செய்வதில்
சாதனைப் படைக்கும்
சீற்றங் கொண்ட காற்றே
உன்னை சபித்திருக்கிறோம்
சகட்டு மேனிக்கு...

எப்படி இருந்தாலும்
காற்றே…
நீயின்றி நானில்லை
இவ்வுலகமும் இல்லை

எல்லோரின் நேசிப்பினில் நீ..
எல்லோரின் சுவாசிப்பினில் நீ..

ஏழைகள்
சீற்றங்களைத் தாக்குவதில்லை..

ஆகவே...
காற்றே...
தென்றலாகவே
இருந்துவிட்டுப் போ..
தெய்வமாய் வணங்குகிறோம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-Nov-21, 5:14 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 82

மேலே