பதினாறோடு பகிரும் நாற்பது
வெண்டாழிசை
இறைவன் படைத்த உடலில் புலன்கள்
செறிவாய் வளர்ச்சி பெருகையில் ஆசையால்
நிறையவே தருமே கிளர்ச்சியை .-- (1)
உணர்ச்சி மிகுகையில் உடலில் தினவும்
குணத்தை மாற்றிட எதிர்ப் பாலினமும்
துணைக்கு வந்தே நிற்குமே -- (2)
தனிமையும் இனிமையாய் தவறுக்கு பாதையை
நனியென வகுத்தே நலங்கெட பார்த்தே
தனியாய் தயாராய் நிற்குமே -- (3)
மங்கை பூத்ததும் வயது யாதெனில்
அங்கத் தினவினால் வந்திடும் சிலிர்ப்பால்
பொங்கும் ஆசைக்கு மயங்கிடின் -- (4)
எந்தக் கலப்பையும் உழுதிட துணிந்தே
விந்தைப் பேச்சால் பேசியே மயக்கிடும்
அந்நேரம் மயங்கின் நாசமே -- (5)
பதினைந்தை நாற்பதும் பதினாறை ஐம்பதும்
கதறிட செய்தே காமங் கொண்டே
உதறிய படியே ஓடுமே -- (6)
ஒவ்வொரு நாளும் உவத்தல் தந்திடும்
ஒவ்வொரு வகையில் சுகத்தை மகிழ்வாய்
அவ்வகை முடிவினில் கருத்தரும் -- (7)
நாடியே தினமும் ஓடியே வந்தவன்
கூடியதால் ஆன மாபெரும் குற்றத்தால்
பேடியாய் மாறிடுவான் பெண்டீரே -- (8)
ஏழ்மையால் பெண்கள் பலரின் நிலைமை
பாழடைந்து செல்லவே காரணம் காமம்
வாழ்வும் உடலும் கெடுமே -- (9)
நரியும் அரிமா வேடந்தறித்து நிற்கும்
சரியாய் கணிக்கா விட்டால் துன்பமே
உரிய எல்லாமும் எள்ளளாகுமே -- (10)
--- நன்னாடன்.