துணிச்சல்

துணிச்சல்


துணிச்சல்
கொண்டவர்களிடம் பூமிபுத்தாடை வாங்கிக் கொள்கிறது!

துணிச்சல் கொண்டவர்களை கொண்டே
சரித்திரம் தன் காகித பக்கங்களை நிரப்பிக் கொள்கிறது!

துணிச்சல் கொண்டவர்களை கொண்டே
சினிமா கதாநாயகர்களை வடிக்கிறது!

துணிச்சல்
கொண்டு புலிமீது ஏறியவனை ஐயப்பன் என ஆன்மீகம் ஆராதிக்கிறது!

சிங்கத்தின்
மீதுதமர்ந்தவளை ஓம்காரியாக மாற்றுவது துணிச்சல்தான்!

முறம் எடுத்து
புலி விரட்டினாள் மறத்தமிழச்சி என்றாலும் துணிச்சல்தான்!

வேல் படை
குதிரைப் படை கொண்டு வெள்ளையனை எதிர்த்தாள் வேலுநாச்சி என்றாலும் துணிச்சல்தான்!

நாலடி
உயரத்தில் உலகத்தை
நடுங்க வைத்தான் ஹிட்லர் என்றாலும் துணிச்சல்தான்!

உயிர்வீழும் வரை உயர்த்திப் பிடித்தான் குமரன்
கொடியை என்றாலும் துணிச்சல்தான்!

வலிமையான பீரங்கிகளின் முன்பு
மெல்லிய உடல் காட்டி விடுதலை வாங்கிய காந்திஜியே துணிச்சல்தான்!

கால்சிலம்பு
எடுத்து கைக்கொண்டு உடைத்து
கள்வன் இல்லை என நிரூபித்த கண்ணகியே துணிச்சல்தான்!

கட்டுமரம்
கொண்டு
கடலின் உடல் கிழித்து கதிரவனுக்கு முன் கரைசேரும் மீனவனும் துணிச்சல்காரன் தான்!

ஆளரவம் இல்லா எல்லையில் அடுத்தவர் ஊடுருவலைத் தடுத்து
தாய்நாட்டை
காக்க
தன்னுயிர் இழப்பதும் துணிச்சல்தான்!

பிறப்பது
ஒரு முறை!
இறப்பது
ஒரு முறை!
இடையில் என்ன இழிந்த வாழ்க்கை?

துணிந்து
நில்!
அணிந்துகொள் வீரமெனும்
வில்!

போனால்
போகட்டும் பல்!
மல்லுக்கு நில்!
மலையும்
ஆகிவிடும்
சிறுகல்!

துணிச்சலை அனிச்சைச் செயலாய் கொள்!

அனைத்தும்
கேட்கும்
உன் வாய் உதிர்க்கும் சொல்!

கதிரை நில்லெனச்சொல்!
நகராமல் நதியை கைது செய்!

துணிந்து பார் தூரத்து விண்மீன்கள்
உன் தோட்டத்தில்
பூ பூக்கும்!

துணிந்து
நின்றால்
காலனும் உன் கட்டளைக்கு
காத்துக் கிடப்பான்!

துணிந்து
சென்றால் சூறாவளியும்
தன்சுபாவம் மறந்து தென்றல் ஆகும்!

துணிச்சலை மனதினில்
விதை!
அது
கொண்டுவரும் வெற்றிகள்
எனும்
விளைச்சலை!

கவிஞர் புஷ்பா குமார்

எழுதியவர் : புஷ்பா குமார் (22-Apr-22, 7:17 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : thunichal
பார்வை : 659

மேலே