உங்களுக்காக ஒரு கடிதம் 17

அன்பு சகோதர, சகோதிரிகளே....
வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? சகோதர...சகோதிரிகள்...ஆம் நம் சமுதாயத்தைத்தான் சொல்கிறேன். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒரு அங்கமல்லவா? இன்றைய பொழுதில் நம் சமுதாயம் எப்படி இருக்கிறது? உள்ளங்கை நெல்லி என நமக்கே நன்றாகத் தெரியும். ஒருவர் வந்து சொல்லவேண்டியதில்லை. அப்படி இருக்க நீ ஏண்டா எழுதுகிறாய்? எழுதுவதினால் பெரிய புரட்சி ஏற்படுத்த போகிறாயா என்ன? நீ ஒரு சாதாரண மனித புழு. உன்னால் என்னத்தை சாதிக்க முடியும்? சத்தியமாக என்னால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாதுதான்.மோதுவது சாதாரண சுவரா என்ன? மாபெரு மலையல்லவா? புரிகிறது. இருந்தும் சின்ன அடி எடுத்துவைக்கிறேன். சிறு துளி பெருவெள்ளமென திரளாதா? இந்த சமுதாயத்திலுள்ள அழுக்கையெல்லாம் அகற்றி தூய்மை படுத்தாதா என்கின்ற ஒரு ஆதங்கம்தான்.
அப்துல் கலாம் சொல்லிவிட்டு போய்விட்டார் கனவு காணுங்கள் என்று. கனவு மட்டும் போதுமா? அது நனவாக்க வேண்டாமா? வீட்டிற்கு ஒரு மரம் நடுங்கள் என்று சொன்னார். அந்த ஒரு சொல்லை தலை மேல் கொண்டு ஒரு கோடி மரங்கள் நட முதல் அடி எடுத்து வைத்து முக்காலே மூணு வீசம் வெற்றியும் கண்டார் நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக். ஒரு நடிகனுக்கு ஏன் இந்த வீண் வேலை.அதுவும் கதாநாயகன்கூட இல்லை நகைச்சுவை நடிகர். நடித்தோமா... பணத்தை சம்பாதித்தோமா...சொத்தை சேர்த்தோமா என்றில்லாமல் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்து விட்டுபோனால்தான் நம் பிறவி பயனடையும் என்கின்ற ஒரு உயர்ந்த நோக்கோடு செயல் பட்டார். வெற்றியும் பெற்றார். மக்கள் மனதில் நீங்காத இடமும் பெற்று விட்டார்.அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரங்கள் கதை சொல்லும்.. சரித்திரம் படைக்கும். சரி.அதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த விவேக் போல எத்தனை எத்தனை விவேக்குகள் இருக்கிறார்கள். அட்ரஸ் இல்லாமல்...ஏன் அங்கீகாரம் இல்லாமல். அதற்காக சின்ன கலைவாணரை நான் குறை சொல்லவில்லை. அதற்கும் ஒரு புகழ்...ஒரு அங்கீகாரம் தேவைப் படுகிறதே. என்ன செய்ய?
என்னால் என்ன செய்ய முடியும்? என்று யோசித்தேன். ஏதோ என்னால் கவிதையோ... கட்டுரையோ... கதையோ எழுத திறமை இருக்கிறது என்று நம்பி இறங்கிவிட்டேன். என்னை பாதித்த...அல்லது என் உள்ளத்தில் தோணுவதை எழுதிவிட துணிந்துவிட்டேன். சில சமயம் கசப்பாகவும்...சில சமயம் இனிப்பாகவும்...சிலசமயம் பாராட்டியும்...பல சமயம் திட்டியும்...சில சமயம் குட்டியும் எழுதப் போகிறேன். என் உள்ள குமுறல்களை...ஏக்கங்களை.... கனவுகளை ... பதிவிடப் போகிறேன். இது போல் எண்ணம் பல பேருக்கு இருக்கலாம். அவர்களெல்லாம் என்னோடு கை கோர்க்கலாமே. ஒரு கை ஓசை எழுப்பாதே...எல்லோர் கையும் இணைந்தால்....கற்பனையே உற்சாகம் அளிப்பதுபோல் இருக்கிறது அல்லாவா?
சென்னையில் நடந்த " மெரினா புரட்சி " அதாங்க " ஜல்லிக்கட்டு " புரட்சியைத்தான் சொல்கிறேன். எவ்வளவு ஒரு வெற்றிகரமான நிகழ்வு. நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய வெற்றி..இமாலய வெற்றி.. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.அந்த நிகழ்வை கொஞ்ச நேரம் நம் கண் முன் ஓடவிட்டு பார்க்கலாமே. பங்கு பெற்றவர்கள் பெரும்பாலும் இளைய சமுதாயம்தான். எல்லோரும் இளைய சமுதாயத்தை திட்டிக்கொண்டிருக்கும்போது இந்த நிகழ்வில் அவர்களின் பங்கு...அளப்பரிய மாற்றத்தை...உற்ச்சாகத்தை இளைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டதல்லவா? எவ்வளவு ஒரு கட்டுப்பாடாக நடத்திக்காட்டினார்கள்.
1. போக்குவரைத்தை அவர்கள் கட்டுப்படுத்திய விதம்,
2. அத்தனை கூட்டத்திற்கும் சாப்பாடு பகிர்ந்த விதம்,
3. சாப்பிட்ட பின் சேர்ந்த குப்பைகளை தாங்களே முன்வந்து அப்புறப்படுத்திய விதம்,
4. ஆம்புலன்ஸ் வந்தபோது...தங்குத் தடையின்றி விரைவாக போக வழிவகுத்தது,
5. காவல் துறைக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு,
6. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடந்து கொண்டது....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நாள் ஆகஆக பொதுமக்கள் போராட்டத்தின் உண்மை உணர்ந்து..அதன் தன்மை உணர்ந்து...சாப்பாடு,தண்ணீர் ,ஸ்னாக்ஸ் என்று ஓடோடி வந்து குவிந்து விட்டார்களல்லவா ? மொத்தத்தில் சமுதாயத்தை குறை சொல்ல ஒன்றுமில்லை. சில புல்லுருவிகளால் ஏற்படும் பக்க விளைவுகள்தான்.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால்...இந்த நிகழ்வுதான் எனக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை வெளிச்சத்தை காட்டியது. நாம் நம் கருத்தை சொல்வோம்.சொல்வதெல்லாம் நன்மைபயக்குமா? தெரியாது? இந்த நிகழ்வுதான் இளைய சமுதாயத்தின் மீது நம்பக்கை ஊட்டியது. இவர்களின் சக்திக்கு முன் நம் சமுதாய பிரச்சனைகள் தவிடு பொடியாகி விடாதா? எழுதி வைப்போம். காலம் பதில் சொல்லும். I am waiting.
தொடருவேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-May-22, 7:28 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 78

மேலே