ஈசனே போற்றி பாகம் 13
லீலை உந்தன் புரியும் அறிவு, கொண்ட பிள்ளை நான் இல்லை.
பயண முடிவு தெரியா பயணி, பாதை தேர்வும் செய்ததில்லை.
உன்னை நம்பி சென்ற பாதை, முட்கள் நிறைந்து தெரிந்ததே.
மாற்று பாதை சுகமே என்றாலும், திரும்பி செல்ல வழி இல்லை.
நீதி தவறி வாழும் பலரும், இன்பம் பொங்க வாழ்வதோ.
நீதி நியாயம் என்று வாழும், வாழ்வில் வேதனை சேருமோ.
உன்னை சேர வழிகள் கடினம், என்ற செய்தி கேட்டதும்.
எடுத்த முடிவு தவறோ என்று, மனதில் கேள்வி தோன்றுமோ.
அனுபவங்கள் பெற்ற பலரின், ஞானம் கண்டு வியக்கிறேன்.
ஞானம் பெற்று தெளிவு பிறக்கும், என்று நானும் நினைக்கிறேன்.
இருக்கும் பொருளின் ஞானம் கண்டு, விந்தையில் நான் இருக்கையில்.
காணும் யாவையும் படைத்தவன் ஞானம் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.
அவர் படைப்பில் அவர் படைப்பாய், குறித்த நேரம் வரை இருந்து.
காட்டும் வழியில் செல்ல எமக்கு, ஆற்றல் மற்றும் அறிவும் தந்து.
தகுதி வளர்க்க தடைகள் வைத்து, அதையும் தாண்ட ஊக்கம் தந்து.
சிலை செதுக்கும் சிற்பி போலே, எம்மை செதுக்கும் குருவாய் இருந்து.
எமக்கு துணையாய் என்றும் இருக்கும், தக்ஷிணாமூர்த்தியே.
தேகப் பயணம் முடிந்ததும் அருளும், சுடலைமாட சாமியே.
நினைத்த பொழுதே முக்தியை அருளிடும், அருணாசலேஸ்வரனே.
உன்னை நம்பி வாழும் எம்மை, என்றும் காக்கும் ஈசனே.