அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை நாவல்கீழ்ப் பெற்ற கனி - பழமொழி நானூறு 138

இன்னிசை வெண்பா

கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. 138

- பழமொழி நானூறு

பொருளுரை:

நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள்;

கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மைத் தெனில் நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

கருத்து:

கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.

விளக்கம்:

'கற்றானும், கேட்டானும்' என்ற இடங்களில் ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. கல்வி கேள்விகளில்லாதவன் உண்மைப் பொருள்களை அறிதல் அருமை என்பதற்கு, 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது உவமையாகக் கூறப்பட்டது.

'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே