கொசுவிற்கு அஞ்சுவோம்

கொசுவை ஒப்ப பெருந்துணிவு உண்டோ
அசையா உயிர்களை அசைத்திடும் வல்லமை
பசையால் உடலை பூசினும் துளையிடும்
பசியது தீர்ந்தாலும் குடித்திடும் குருதியை .
ஆதியில் தோன்றிய சிறிய உயிரினம்
பேதியை தந்திடும் நோயைப் பரப்பிடும்
வேதனை மிகுந்த வலியினைத் தந்திடும்
போதனை செய்தாலும் மாறுமோ சைவமாய்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே அதனிடம்
பயந்தவன் துணிந்தவன் யாவரும் பணிவான்
அயர்ந்து இருந்தால் விரைந்து உறிஞ்சும்
பயமே இல்லாமல் பறக்கும் பூச்சியாம்
குடிலோ கூடோ வலையோ இல்லையே
உடலில் எலும்பும் தசையும் ஏதுமில்லை
விடியும் வரையில் குருதியில் குளிக்கும்
அடித்தால் அதுவும் பழம்போல் நழுவும்
அதனால் இறப்போர் கோடியை எட்டும்
பதமாய் இருப்பினும் பலமாய் கடிக்கும்
சிதையா நிலையில் உலகில் வாழும்
முதிர்ந்த உயிரனம் கொசுவிற்கு அஞ்சுவோம்.
--- நன்னாடன்