பொய் வாய் கொண்டவள்
காட்டைப்போல் விரியும்
தன் மனதுக்குள் ஒளிந்து
கனவுக்குள் குதித்தவள்
பூக்களில் மோதி
உயிரிழந்து போனாள்.
எங்கு திரும்பினாலும்
போன பாதையில் திரும்பியதும்
வந்த பாதையே வருகிறது
என்றவளின் காலில்
ஒட்டிக்கிடந்தது நரகம்.
கண்களை விழிக்க வைத்த
கனவுதனை பிரித்து பார்க்க
ஒலியின்றி தெரிந்த என்
முகத்தில் இறந்திருந்தது
அவளின் எதிர்காலம்.
ஒளியை உணர்வால்
எரித்துக்கொண்டிருக்கும்
விளக்கிலிருந்து வெளியேறும்
வண்ணத்துப்பூச்சியின் நிழல்.
நிழலின் முகத்தை நான்
மறைக்க மறைக்க
ஆவியாகிறது கண்ணீரின் வலி.
சொற்களின் மர்மநினைவை
என் வாளால் இன்று
வெட்டி எறிந்தேன்.
அவள் மரணத்தை அவளே
காணாதிருக்க
இன்றோடு மடிகிறது
ஒரு அலை.