தீர்ப்பு

*சரயு நதி*

( இக் கவிதை இராமாயணத்தின்
உத்தர காண்டத்தின்
இறுதிப் பகுதியைத்
தழுவி முழுவதும்
' *அ'* என்று தொடங்கும்
வரிகளால் எழுதப்பட்டது)

*சரயு நதி*

அயோத்தியின்
அசுவ மேதக் குதிரை
அங்கே கட்டப்படிருந்தது.

அதனருகில் இரு
அருமைச் சிறுவர்கள்.

அவனது அம்புகள்
அச் சிறுவர்கள் இருவரால்
அடிபட்டு விழுந்தது கண்டு
அதிர்ந்து போனான்
அயோத்தி அரசன் இராமன்

அப்பாவும் பிள்ளைகளும்
அம்பெய்து கொண்டு.

அச் செய்தி கேட்டு
அவர்களிடையே வந்து
அரணாக நின்றாள் சீதை.

அன்னையைக் கண்டதும்
அம்பைத் தாழ்த்தினர்
அருமைப் புதல்வர்கள்
அன்பு லவ குசா இருவரும்.

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அதில் காதல் ஏதுமில்லை.

அன்றொரு நாளில்
அடர்ந்த கானகத்தே
அனாதையாக
அவள் வந்து நின்றதை
அவள் மறக்கவில்லை.

அயோத்தி குடிமகன்
அவதூறு கூறிவிட்டான்,
அதுதான் காரணமாம்.
அவள் கானகம் ஏக.
அயோத்தி அரசன் ஆணை.
அதையும்
அவள் மறக்கவில்லை.

அயோத்திக்கு வா!
அழைத்தான் இராமன்.
அவன் கேள்வி முடியு முன்
அவள் பதிலளித்தாள்.

அரசியென்றாலும் நான்
அயோத்தியின் குடிமகளே!
அவ் வகையிலும் எனக்கு
அநீதியே வழங்கினீர்

அன்னையின் கடமை
அவள் புதல்வர்களை
அருங்கலைகள் சிறக்க
அன்போடு வளர்ப்பது.

அடர் கானகத்திலும்
அக் கடமையாற்றினேன்
அக மகிழ்வோடு.

அன்னையின்
அன்பால் வளர்ந்தவர்கள்
அறிவு வீரம் சிறந்தவர்கள்
அப்பாவை அறியாதவர்கள்

அயோத்தியின் வாரிசுகள்
அருமைப் புதல்வர்கள்
அவர்கள் நின் பொறுப்பு.

அக்னிப் பரிட்சை
அடர் வனம் ஏகுதல்
அடுத்தும் பழி சுமத்தினால்
அப்போது என் செய்வீர்?

அவளது கேள்விக்கு
அமைதியே பதிலாக
அண்ணல் இருந்திட்டான்.

அவதூறு களைந்திடவே
அன்னை நிலத்து
அரவணைப்பில் புகுந்தாள்

அனைவரும் அங்கே
அதிர்ச்சியில் மூழ்க

அயோத்தி சரயு நதியின்
அழைப்பின் ஒலியை
அரசன் இராமன் மட்டுமே
அறிந்திருந்தான்....

- கமலநாதன்

எழுதியவர் : கமலநாதன் (5-Nov-22, 12:23 pm)
சேர்த்தது : Kamalanathan S
Tanglish : theerppu
பார்வை : 74

மேலே