461 நஞ்சனைய பாவம் நவின்றியற்றல் வருத்தம் - அறஞ்செயல் 13

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

உளதிலை யென்ன வுரைப்பதே வருத்த
..முண்மைகூ றிடலெளி தாகுங்
களவுகட் காமங் கொலைசெயல் வருத்தங்
..காவலன் தண்டமூர்ப் பகையாம்
உளமதை வருத்தும் இகபரங் கெடுக்கும்
..உண்மையா விவையெலாம் உன்னில்
களநிகர் பாவஞ் செய்தலே கட்டங்
..கருதறஞ் செயலெளி தன்றோ. 13

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உண்மையை மறைத்து இல்லை என்று பொய் சொல்வது துன்பம் தரும். உண்மை சொல்வது எளிதாகும்.

களவு, கள், காமம், கொலை முதலிய பாவம் செய்வது துன்பமாகும். செய்த அப்பாவத்துக்கு அரசாங்கத் தண்டனையும், ஊரார்களின் பகையும் ஏற்படும். உள்ளத்தையும் வருத்தி, இம்மை மறுமை இன்பங்களையும் கெடுக்கும். இவை எல்லாம் உறுதியாக நிகழும்.

அதனால், நஞ்சை ஒத்த பாவம் செய்வதை விட்டு, அமிழ்தத்தை ஒத்த சிறந்த புண்ணியம் செய்வது எளிதல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.

காவலன் - வேந்தன். தண்டம் - ஒறுப்பு. களம் - நஞ்சு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 10:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே