வேற்றுலகவாசியாய்
என்னயிந்த மனிதர்கள் எல்லாமும் தற்சார்பாய்
தன்னையே முதன்மையாய் எண்ணியே எவற்றையும்
குன்றையும் ஏரியையும் கடலையும் நிலத்தையும்
பன்றிகள் தோண்டுவதாய் துளைத்தே அழிக்கிறரே
வெறுப்பில் புவித்தாய் வெம்மையை உமிழ்ந்தால்
நிறமின்றி உருகுமே நிலமெல்லாம் கருமையாய்
வெறுமையுள் சுழல்புவி சுழியமாய் மாறிடுமே
மறுசுழற்சி நிலையிலே ஞாலமும் பிறந்திடுமே
ஆற்றையும் முகடையும் அடர்ந்த காட்டையும்
வேற்றுலக வாசியாய் எண்ணியே அழித்திடின்
சேற்றினை செய்திடவே நீரின்றி ஆகிடுமே
மாற்றத்தால் வளியுமே வலிமையை இழந்திடுமே
பளபளக்கும் மாளிகையும் பரம்பரை சொத்துக்களும்
விளக்கமிலா கவிதைப் போன்றே விகாரமாய்
அளவீடு இல்லாமல் அல்லலில் அகப்படுமே
களவிட முடியாத உயிரும் கருந்துளையுள்.
—- நன்னாடன்.