தம்மாத்துண்டு கவிதைகள்

சிறு புல்லின் அடியில்
புழு வாழ்வதற்கான நிழல் இருக்கிறது
தோழா! நாம் வாழ்வதற்கு ஒரு வழி இல்லாமல் போகுமா?
--------------------------------------------

போதையில் கிடக்கிறான் தகப்பன்
பிச்சை எடுக்கிறாள் தாய்
குழந்தைகளோடு விளையாடுகிறார் கடவுள்.
--------------------------------------------

உங்கள் வாகனத்தின் முன்பு சாடும்
நாய்களைத் திட்டாதீர்கள்
அதற்கும் காதல் தோல்வியாக இருக்கலாம்.
--------------------------------------------

கோவிலுக்கு வழிபட வருவோரையும் கடவுள்களாக மாற்றுகிறார்கள் பிச்சைக்காரர்கள்
--------------------------------------------
துளியை ருசி பார்க்கும் ஆசையில்
மூடி திறந்த பிராந்திப் பாட்டிலுக்குள் சென்ற சில மீன்கள்
அதிலேயே வளர்ந்து
வெளிவர முடியாமல் தவிக்கின்றன
--------------------------------------------

அன்று பள்ளிக்கூடம் முழுதும் என்னைப்பற்றிய பேச்சுத்தான்
என் சத்துணவு முட்டையில்
இரண்டு மஞ்சள் கரு!
--------------------------------------------

கோயில் திருவிழா முடிந்து
எல்லோரும் வீடு சென்ற பிறகு
ஒரு குழந்தை சாப்பிட்டுப் போட்ட
எச்சில் ஐஸை
நக்கிப் பார்க்கிறார் கடவுள்!

--------------------------------------------
வெற்றிக்கான சாவி எப்பொழுதும் தோல்வியின் சட்டைப் பாக்கெட்டில்தான் இருக்கிறது..

எழுதியவர் : திசை சங்கர் (12-Aug-23, 9:09 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 76

மேலே