காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 19
பாரதியின் கண்ணம்மா
மதி மயங்கச் செய்யும் மந்திரப் புன்னகையில் முகமே பிரகாசிக்க எதிரில் வந்த ப்ரியம்வதாவை பார்த்து நெருப்பில் விழுந்த புழுவாக தவித்தாள் திலோத்தமா.
சட்டென்று துளிர்த்த கண்ணீரை வழிய விடாமல் உள்ளிளுக்க இயலாது சட்டென்று முகத்தை திருப்பி, ப்ரியா பார்த்து விடாமல் மறைத்தாள்.
அதைப் பார்த்து புன்னகையுடன் திலோத்தமாவை நெருங்கி மிக மிக மென்மையாக அவள் வலது கரத்தை பற்றி லேசாக அழுத்தி அவளை தன் புறம் திருப்பினாள் ப்ரியம்வதா.
அவள் முகம் அணிந்து இருந்த புன்னகையில் ஒரு மாற்றுக் கூட குறையாமல் நிமிர்ந்து திலோத்தமாவின் கண்களை நேராகப் பார்த்து, என்னைப் பார்த்து பரிதாபப் படுறீங்களா....? என்று புருவம் கேட்டபடி நோ..... என்றவாறு தன் ஆள்காட்டி விரலை நீட்டி இடவலமாக ஆட்டியபடி பத்திரம் காட்டி "ஐ டோண்ட் லைக் திஸ் திலோ" என்று தன் புன்னகையை இன்னும் அகலப்படுத்தினாள்.
கண்முன் நடந்த அனைத்தையும் பார்த்தபடி நின்றிருந்த பாரதி சிறு சிரிப்புடன் ப்ரியாவை அணுகி அவள் தலையை மென்மையாக தடவியபடி, யாரும் மேடத்தை பார்த்து அனுதாபப்படுவது அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது என்றுரைத்தான். நீங்க இப்பத்தான் வந்து இருக்கிறீங்க அதான் உங்களை இத்தோட விட்டு விட்டாள் இல்லன்னா அவள் எடுக்கிற அவதாரமே தனிதான் என்று கூறியபடி தன் கண்ணம்மா வைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.
அவன் செய்கையில் வெட்கம் கவ்வ முகம் சிவக்க இமை தாழ்த்தினாள் பாரதியின் கண்ணம்மா.
அவர்களுக்கிடையில் உள்ள அன்யோன்யம் கண்ட திலோத்தமாவுக்கு ஒரு விதமான வெறுமை மனதில் குடிகொண்டது. ரகுராமனின் நினைவு மனதினில் விஸ்வரூபம் எடுக்க அவளின் மன அமைதி விலகியது. மந்திரப் புன்னகையுடன் அனுமதியின்றி அவள் மனதினில் நுழைந்தான் அவளின் மாயக்கண்ணன்.
கண்ணீர் துளிர்க்க இமை தாழ்த்தினாள் திலோத்தமா. அவளின் மனநிலையை தெளிவாகப் புரிந்து கொண்ட ப்ரியம்வதா பாரதியைப் பார்த்து விழியாலே அனுமதி வேண்டினாள்.
அவன் புன்னகையால் அவளின் கேள்விக்கு அனுமதி அளித்தான்.
திலோத்தமா வாங்க நாம கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா பேசலாமா என்றாள்......
ப்ரியாவின் முகத்தை தயக்கத்துடன் ஏறிட்டு பார்த்த திலோத்தமா, அந்த புன்னகைக்கும் கண்களில் கட்டுண்டு சரி என்று தன்னிச்சையாக தலையாட்டினாள்.
இவ்வளவு நேரமாக பாரதியின் கைகளில் இருக்கும் கண்ணனைப் பார்த்தாள், குழந்தையோ அவன் தோளில் சலுகையாக சாய்ந்து நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
நீங்க கவலைப் படாமல் போங்க குழந்தையை நான் பத்திரமா பார்த்துக்கறேன் என்று கூறி சிரித்தான் பாரதி.
திலோ கமிஷனர் வினோத்தை ஏறிட அவரோ சிறு தலை அசைப்பின் மூலம் அனுமதி வழங்கினார்.
ப்ரியாவின் வீல்ச்சேரை தள்ளிச் செல்லும் யோசனையுடன் திலோ சேரை தொடபோக ப்ரியா தடுத்து அவள் கரம் பற்றியபடி, நோ...... திலோ ஐ ஹாவ் ஹேன்டில் திஸ் ப்ளீஸ் என்றாள்.
ஹோ..... ஐ ஆம் ரியலி சாரி ப்ரியா என்று சிரித்தபடி விலகி நடந்தாள் திலோத்தமா.
ஹே குட்டி இங்க வாங்க என்று அங்கு நின்றபடி ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க பெண்னை அழைத்து குழந்தையை தொட்டிலில் உறங்க வைக்குமாறு கூறி கொடுத்து அனுப்பினான்.
*****
தன் பேச்சை மதிக்காமல் எங்கிருந்தோ வந்த குழந்தைக்காக தான் உயிராக நேசித்த தன் மகள் வீட்டை துறந்து சென்றதை கோபாலகிருஷ்ணனால் ஜீரணிக்க முடியவில்லை. தலையில் கை வைத்தபடி ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டார். அவரால் நடப்பை இன்னும் நம்பவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
சிறு வயதில் திலோ விளையாட போகும் போது காலில் அடிபட்டு விட்டது என்று ஒரு நாய் குட்டியை தூக்கி வந்த போது அதை எதிர்த்த தன் மனைவியை திட்டி விட்டு அவர் மகளுக்குத்தான் ஆதரவு தெரிவித்தார்.
அதன்பின் திலோத்தமா பயம் விலகி இதே போல் சில நேரம் திடீரென பூனைக் குட்டியுடன் வருவாள், சில நேரங்களில் பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களுக்கு பீஸ் கட்ட முடியவில்லை என்று பண உதவி செய்யுமாறு அடம்பிடிப்பாள் அப்பொழுது எல்லாம் மகளின் இரக்க குணம் குறித்து பெருமை வந்து கவ்வும் மனதில் இன்று அவள் முன்பின் அறியாத ஒரு குழந்தைக்காக பெற்றோர்களை துறந்து போனதை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாவம் பார்த்து தெருவுல போறத எல்லாம் வீட்டுக்கு கொண்டு வரும் இவள் குணம் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பெரிய பிரச்சினையா தான் முடியப் போவுது பாருங்க என்று இவர் மனைவி ஆருடம் போல் கூறிய போது அலட்சியமாக தான் நகைத்தது இப்பொழுதும் அவரின் செவியில் எதிரொலித்தது. காலம் கடந்த ஞானோதயமாக தான் தவறு செய்து விட்டோமோ என்ற சந்தேகம் எழுந்தது.
தன் மகளின் எதிர்காலம் குறித்த பயம் பந்தாக எழுந்து நெஞ்சை அடைத்தது. தளர்ந்த நடையுடன் சென்று தன் அறையில் நுழைந்து கொண்டார். அங்கு ஏற்கனவே அவர் மனைவி அழுதழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள். இவர் நுழைந்தவுடன் நிமிர்ந்து இவரை பார்த்த குற்றம் பொதிந்த பார்வையில் இவரின் தலை தானாக தாழ்ந்தது.
அவிழ்ந்து இருந்த முடியை தூக்கி கொண்டையாக போட்டபடி விழிகள் சிவக்க கோபத்துடன் முறைத்தபடி இவர் முன் வந்து நின்ற மனைவியைப் பார்த்து அரண்டு எழுந்து நின்றார் கோபாலகிருஷ்ணன்.
குற்றக் குறுகுறுப்பில் குறுகி இருந்த மனது மனைவியின் இந்த அவதாரத்தை கண்டு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிற இடதுபுற இதயத்தை பிடித்தபடி சரியத் தொடங்கினார்.
மீண்டும் சந்திப்போம்.....
கவிபாரதீ ✍️