சர்வதேச விளையாட்டு தின கவிதை

#சர்வதேச_விளையாட்டு_தினம்_இன்று
#தவறாமல்_படியுங்கள்
#ஆக்கம்_கவிதை_ரசிகன்_குமரேசன்

விளையாட்டுச்
செடியிலிருந்து தான்
ஆரோக்கிய மலர் பூக்கிறது.....!

பஞ்சு உடலை மட்டுமல்ல
பஞ்சு மனதையும்
இரும்பாக்கும் கலை
இதற்கு மட்டுமே
தெரிந்தது..... !!!

இதோடு
புணரும் போது
தன்னம்பிக்கை
தானாகவே
பிறந்து விடுகிறது.....!

ஓடி ஆடி விளையாடும் உடலில்
நோய்நொடி சிலந்தி
வலைப் பின்னுவதில்லை....

இதனுடன்
பழகிப் பாருங்கள்
உங்கள்
'குறைகளை' எல்லாம்
'நிறை'களாக்கி விடும்.....

'ஒழுக்கம்'
இந்தத் 'தொட்டிலில்' தான் 'வளர்த்'தெடுக்கப்படுகிறது....

'குழு மனப்பான்மை'
இதில் தான்
'கூடு கட்டி' வாழ்கிறது......

'ஆண்டவனை' விட
'விளையாட்டு'
ஆகச் சிறந்ததாக
உங்களுக்கு அமையலாம்...
இல்லையெனில் ?
விவேகானந்தர்
சொல்லியிருக்க மாட்டார்
"கீதை படிப்பதை விட
கால்பந்து விளையாடுவது
ஆண்டவர் அருகில்
அழைத்துச் செல்லும்" என்று

இன்று விளையாட்டை
'விளையாட்டாகவே'
நினைத்து விடுகிறார்கள்.....

"விளையாட்டு
வினையாகும் " என்று
சொல்லத் தெரிந்த நமக்கு
" விளையாட்டு
பனையாகும் " என்று
சொல்லத் தெரியாமல்
போனது ஏனோ ?

'மதிப்பெண் சான்றிதழை' விட
'விளையாட்டுச் சான்றிதழ்'
உயர் படிப்புக்கும்
வேலை வாய்ப்புக்கும்
உதவும் என்று
'பேதை'களுக்குத்
தெரியாமல் போனதில்
நியாயம் இருக்கலாம்.....
'மேதை'களுக்கும்
தெரியாமல் போனதில்
எப்படி நியாயம் இருக்க முடியும் ?

விளையாட்டு வகுப்பையும்
கணக்கு ஆசிரியரே !
எடுத்துக் கொள்ளும்
இந்தத் தேசத்தில்.....
ஒலிம்பிக் களத்தில்
நாம்-பதக்கம்
வாங்க முடியாது
ஏங்கத்தான் முடியும்....

உடற்பயிற்சி தேர்வு
சம்பிரதாயத்துக்காக
வைக்கும் வரையில்
விளையாட்டுப் போட்டிகளில்
நமது தேசமும்
சம்பிரதாயத்துக்குத் தான்
கலந்து கொள்ள முடியும்....

தேர்ச்சி பெறாத
மாணவர்களுக்குள்
எத்தனை எத்தனை
சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்களோ...?

காலணி வாங்க முடியாத
ஏழைக்குள்
எத்தனை எத்தனை
ரொனால்டோ
இருக்கிறார்களோ....?

சில குறைபாடு
உடையவர்களுக்குள்
எத்தனை எத்தனை
லியானால் மெஸ்ஸி இருக்கிறார்களோ....?

ஊர் பெயர்
தெரியாதவர்களுக்குள்
எத்தனை எத்தனை
கபடி பெரியசாமி
இருக்கிறார்களோ.....?

வறுமையால் வாடும்
பெண்களுக்குள்
எத்தனை எத்தனை
பி.டி. உஷா இருக்கிறார்களோ...?

ஊக்கப்படுத்தினால்
எத்தனை எத்தனை
சானியா மிர்சா
உருவாகுவார்களோ....?

இவர்கள் எல்லாம்
மதிப்பெண்குள்
மடிந்து கொண்டும்
வறுமைக்குள்
கருகிக்கொண்டும்
வாய்ப்புகளுக்கு
ஏங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்...

விளையாட்டே !
சூதாட்டமான பிறகு
சூதாட்டுகின்றவர்களுக்கு
சொல்லவா வேண்டும்?
சூறையாடுகின்றனர்.....

140 கோடி மக்கள்
வாழும் இந்த தேசத்தில்
'உலக கால்பந்து போட்டியில்'
கலந்து கொள்ளும்
ஒரு அணியை
உருவாக்க முடியாமல்
போனதற்கு காரணம் என்னவென்று
என்றாவது நாம்
சிந்தித்தது உண்டா.....?

சிறந்த
விளையாட்டு வீரர்களுக்காக
இன்னும்
'எத்தனை ஆண்டுகள்
காத்திருக்க வேண்டுமோ
நமது தேசம் .......?'

அனைவருக்கும்
சர்வதேச விளையாட்டு தின
நல்வாழ்த்துக்கள் !!!

இவண்
கவிதை ரசிகன் குமரேசன் ♥

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Jun-24, 3:33 pm)
பார்வை : 18

மேலே