இவரு ரொம்ப நல்லவரு

இவரு ரொம்ப நல்லவரு..!

கொஞ்ச நாட்களாகவே வீட்டில் மனைவியுடன் மனகசப்பு, அதுவும் பையனும், பொண்ணும் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்த பின்பு அவளுக்கு என்னுடைய சம்பாத்தியத்தை பற்றி குறை சொல்ல ஆரம்பித்து விட்டாள். முதலில் வெறும் முணுமுணுப்போடு இருந்தவள், இப்பொழுது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தாள் அதுவும், வசவுகளோடு, இது ஒரு பொழப்பா? என்றும் கூட
அவளுக்கு எங்கே தெரியப்போகிறது காசின் அருமை, இவள் அப்பன் சின்ன மளிகை கடை மட்டும் நடத்தி கொண்டிருந்தவன், அப்பொழுது நானும் கூட வசதியில்லாத பையனாக இருக்கவும் பொண்ணை கொடுத்து ஒரு சின்ன “பெட்டிக்கடை” வைத்து கொடுத்து விட்டான்.
இன்னைக்கு மூணு இடத்துல டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வச்சு, மெயின் ரோட்டுல இருபது செண்ட் இடம் வச்சு, இதெல்லாம் எப்படி வந்தது? இந்த சம்பாத்தியத்துலதானே?
அன்று காலையில் எங்கள் நகரில் நாலைந்து தெரு தள்ளியிருந்த சோணாச்சலத்தின் இறப்பை கேட்டதும் முதல் ஆளாய் நான் அங்கு சென்று நின்றதை அருகில் இருந்தவர்கள் ஆச்சர்யமாய் பார்த்தனர். இவரு வந்திருக்காரு, அதை விட, செய்தி கேள்விபட்டு முதல்ல வந்து நின்னுருக்காரு..! ஆச்சர்ய முகங்களாக அங்கு குடியிருப்பவர்கள் அனைவரிடம் காணப்பட்டது.
அவர்களின் ஆச்சர்யத்திற்கு காரணம் அந்த ஏரியாவில் நான் பிரபலமான புள்ளி, அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. மற்றபடி கொடுக்கல் வாங்கலில் இங்குள்ளவர்கள் வந்து பார்க்கும் நபர் என்று அறியப்பட்டவன்.
சோணாச்சலத்தின் வீட்டில் அவரின் மனைவி, மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த பெண் இன்னும் வரவில்லை. அவளை திண்டுக்கல் பக்கம் கட்டி கொடுத்திருக்கிறது. செய்தி கேள்விப்பட்டதும் அவளும் கணவரும், குழந்தைகளும் கிளம்பி வருவதாக செய்தி கொடுத்து விட்டார்கள்.
வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த உள்ளூர் வாசிகளிடம் பேச்சு கொடுத்தபடி உட்கார்ந்திருந்தேன். அருகில் வந்து நின்ற சோணாச்சலத்தின் மகள் என் அருகில் வந்து ஐயா எங்கம்மா உள்ளே கூப்பிடறாங்க, என்றாள்.
எல்லோரிடம் சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். சோகமாய் நின்று கொண்டிருந்தாள் சோணாச்சலத்தின் மனைவி. என்னம்மா வேணும்? கேட்டேன்.
திடீருன்னு இப்படி ஆகிடுச்சு, நீங்க கொஞ்சம் பணம் கொடுத்து உதவினீங்கனா..? பாவம் கடன் கேட்பதற்கு கூசினாற்போல் பேசினாள்.
இதுக்கென்னம்மா தயக்கம்? இந்தாங்க சட்டைப்பையில் இருந்து இருபாதியிரம் ரூபாய் கட்டை எடுத்து கொடுத்தேன். இந்தாங்க இதுல இருபதாயிரம் ரூபாய் இருக்கு, இன்னும் தேவையின்னா கூச்சப்படாம கேளுங்க.
சுற்றி நின்று கொண்டிருந்த பெண்களின் கண்களில் நன்றி தென்பட்டது, கேட்டவுடனே எடுத்து கொடுத்துட்டாரு, நான் இதை கண்டு கொண்டாலும் கண்டு கொள்ளாதவன் போல் நான் வெளியதான் இருப்பேன், எப்ப வேணா கூப்பிடுங்க, சொல்லி விட்டு வெளியே வந்தேன்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அங்கு செலவழித்திருந்தேன். அதற்குள் அவரின் முதல் மகளும் அவள் குடும்பமும் வந்து விட்டது. காரியம் எல்லாம் நல்லபடியாக முடிந்து வரும் போதும் சோணாச்சலத்தின் மனைவியிடம் மேலும் இருபதாயிரம் கொடுத்து விட்டு வந்தேன். திடீருன்னு இப்படி ஆயிடுச்சு, செலவுகளை எல்லாம் சமாளிக்கணும், அதனால இந்த பணம் கையில் இருக்கட்டும்.
வீட்டிற்குள் நுழையும்போதே மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள், என்ன காலையில போனவங்க, இப்பத்தான் வர்றீங்க, பாவம் நல்ல மனுசன் அவரு காரியம் எல்லாம் முடிஞ்சுதா?
முடிஞ்சுது, முடிஞ்சுது அவசரமாய் தலையாட்டிவிட்டு குளிக்க சென்றேன்.
அப்பாடா..! வீட்டில் சாப்பாட்டு வேளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வாக நாற்காலியில் உட்கார்ந்தவன் மனசுக்குள் கணக்கு போட்டு பார்த்தேன், இருபது மறுபடி இருபது, அது போக தாரை தப்பட்டை செலவு எல்லாம் சேர்த்து அம்பது ரூபாய் ஆயிடுச்சு. சோணாச்சலம், மத்தவங்க மாதிரி பூரா பணத்தையும் அமுத்திக்கலை, உனக்காக அம்பது ரூபாய் செலவு பண்ணியிருக்கேன், மனசுக்குள் சமாதானப்படுத்தி கொண்டேன். அன்று சோணாச்சலம் என்னிடம் வந்து சண்டையிட்டது ஞாபகம் வந்தது.
அண்ணாச்சி உங்க சீட்டுல பணம் கட்டி முடிஞ்சு ஒரு வருசமா இரண்டரை லட்சம் நிக்குது, “இதா அப்ப கொடுக்கறேன், இப்ப கொடுக்கறேன்னு” இழுத்துகிட்டே இருக்கறீங்க, தயவு செஞ்சு அதை கொடுத்தீங்கன்னா என் இரண்டு பொண்ணுங்க பேர்ல டெபசிட் பண்ணிடுவேன். இது வீட்டுக்கு தெரியாம உங்க கிட்ட போட்ட சேமிப்பு, நாளைக்கு எனக்கொண்ணு ஆயிப்போச்சுன்னா, இந்த பணம் அவங்களுக்கு உபயோகமா இருக்கும்.
கொடுத்துடறேன் சோணாச்சலம், கொஞ்சம் அங்க இங்க செலவு இழுத்து போச்சு, கூடிய சீக்கிரம் கொடுத்துடறேன்.
இப்படி சொல்லி சொல்லியே ஒரு வருசமா ஓட்டிகிட்டிருக்கீங்க, முணங்கியபடி வெளியே திரும்பி சென்றவனை பார்த்து கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
பாவி போய் இரண்டாவது வாரம் சொன்னது மாதிரியே திடீருன்னு போயிட்டான். நல்லதா போச்சு. திருப்தியுடன் தலையாட்டி கொண்டேன்.
ஒரு வாரம் ஓடியிருந்தது, என் மனசுக்குள் சின்ன குறு குறுப்பு ஏதோ ஒன்று குறைவதாகவே தோன்றி கொண்டேயிருக்கிறது. என்னவாக இருக்கும்?
யோசித்து யோசித்து நாட்கள் தான் ஓடியிருந்தது, திடீரென்று ஒரு நாள் நான் வீட்டில் மறைவாக வைத்திருந்த கணக்கில் கொண்டு வராத பணத்தை எடுத்து பார்த்தேன். நகரில் விலைக்கு வந்திருக்கும் ஒரு இடத்தை வாங்குவதற்காக தேவைப்பட்டது. பணத்தை கணக்கிட்டதில் கொஞ்சம் குறைந்திருந்தது. அது எப்படி? சரியாத்தானே கட்டுக்களை எண்ணி வச்சேன்?
யாரிடம் கேட்பது? மனைவி, மகள், மகன் அனைவரிடமும் அன்பாகவும், மிரட்டியும் கேட்டு பார்த்தேன். எங்களுக்கு தெரியாது, ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்.
இதே எனக்குள் மன குடைச்சலாய் ஓடிக்கொண்டிருக்க, அன்று ஏதேச்சையாக சோணாச்சலத்தின் மகளை பார்க்க நேர்ந்தது. பாதையின் அந்த புறமாய் நின்று கொண்டிருந்தவள், அத்தனை வாகன இடைஞ்சல்களையும் நீந்தி கடந்து வந்து “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” அப்பாவோட பணம், நீங்க கொடுத்து விட்டதா சொல்லி ஒருத்தர் வந்து கொடுத்தாரு, ரொம்ப நன்றி சொல்ல சொன்னாங்க எங்க அம்மா உங்களுக்கு.
எனக்கு கோபம் பொங்கி பொங்கி வந்தாலும் பல்லை மனதுக்குள் கடித்தபடி பரவாயில்லைம்மா, இப்ப நீ என்ன பண்ணறம்மா? சோகத்தை மனதுக்குள் வைத்தபடி கேட்டேன்.
அங்கிள்..! இது எனக்கு பைனல் இயர், கேம்பஸ் இண்டர்வியூல வேலை கிடைச்சிருக்கு, சீக்கிரம் முடிச்சுட்டு வேலைக்கு ஜாயின் பண்ணிடுவேன். தங்கச்சிய இந்த வருசம் காலேஜுல சேர்த்துட்டோம். எல்லாம் நீங்க அப்போவொட பணம்னு கொடுத்துதவுனதுனாலதான் முடிஞ்சுது சந்தோசமாய் சொல்லி கொண்டு போனாள்.
போச்சு..போச்சு..அப்ப அந்த அம்பது என்னோட பணமா? மனம் ஆறாட்டமாக இருந்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Jul-24, 2:28 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 53

மேலே