இருந்த வாழ்வும் இருண்டது பண வரவால்
உண்மையைச்சொல்கிறேன்
கொடுத்துவைத்தவர்கள் அன்றைய நன்மக்கள் - வாழ்வில்
கண்ட நற்க்கனவுகளையும்,
நிஜத்தில் கையகப்படுத்தியவர்கள்!!!
ஆணோ, பெண்ணோ
அவர்களின் நல்லெண்ணங்களையும்,
பெரியோர் கூற்றுக்கு இணங்க
"வாழ்வின் மெய்ப்பொருள்" அறிந்து
வாழத்துடிக்கும் ஆசைகளையும் - அவர்களின் மணவாழ்க்கையில் விதைத்தனர்.
அவர்கள் -
மனதில் அன்பும்,
தெய்வத்தின் மிக முக்கிய பண்பும் (பொறுமை),
போற்றுதலுக்குரிய நன்னடத்தையுமே - வாழ்வின்
தேவையாகக்கருதி வாழ்ந்தனர்.
யாரையும் ஏமாற்றாது - உழைப்பில்
கிடைத்த போதுமான பணத்தைக்கொண்டு
தன் மக்களையும் நன்றாக வளர்த்தனர்.
பலரும் போற்றிவாழ்த்த - நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ்ந்தனர்.
ஆனால்,
இன்றைய உலகில்
"போதும் என்ற நல்உள்ளம் யாருக்கும் தோன்றாதுபோக" - அன்றிலிருந்தே
அழிவுகளின் பாதையும் திறந்தது,
தேவைக்கு மீறிய பணமும்
வாழ்வில் புகுந்தது,
நாகரீகம் நடுத்தெருவில் சீர்குலைந்தது,
ஒரே கூட்டிலிருந்தும் -
கணவன் மனைவி,
பெற்றோர் பிள்ளைகள்,
பெரியோர் சிறியோர் - என்ற உறவுகள்
அர்த்தமற்று,
அனாதைகளாக வாழும் காலம் உதித்தது,
வாழ்க்கையும் வேரோடு அழிந்தது.
இவ்வாறாக இருந்தும், சிலர் - இன்றும்
பணம், பணம் என்று பறக்கிறார்கள்,
மனம் இல்லாத பணகுணவான்கள் - மறந்துபோனார்கள்
மரணம் நேர்ந்தால் - மனமுவந்து
யாரும் தன்னருகே நெருங்கமாட்டார்கள்
துளி கண்ணீரும் சிந்தமாட்டார்கள்
இறுதிவூர்வலம் எடுக்கமாட்டார்கள்
அழிந்துபோன தன்சிதைக்கும் சரிவர தீமூட்டமாட்டார்கள்.
அன்றைய காலத்தில் - சிலர்
மூன்றுக்கு மேல்
பிள்ளைகள் பெற்றிருந்தாலும் - அவர்கள் வாழ்க்கை,
தெளிந்த நீரோடைப்போன்று சீராகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
ஆனால் இன்று,
ஓரிரு பிள்ளைகள் பெற்றே - அவர்களை
ஒழுக்கமானவர்களாகவும்,
சிறந்த பண்புள்ளவர்களாகவும்,
தர்மநெறிகளைப் பின்பற்றுபவர்களாகவும்
வளர்க்க மறந்து,
பெற்றோர்கள் மட்டும் பணமோகத்தில் வாழ்ந்திடாது,
அவர்களது பிள்ளைகளையும் அவ்வாறே வாழக்கற்றுக்கொடுக்கிறார்கள் - இவ்வாறிருக்கையில்
நாளை,
நாம் எங்கே தேட
நல்லோர்களையும்,
உண்மை நீதிநெறிகளைக் காப்போர்களையும்,
பிறரின் நல்வாழ்வுக்காகப் போராடும் நல்லுள்ளங்களையும்.
யோசித்துப்பாருங்கள்....
பணம் நாடாது - நல்
மனம் நாடுங்கள்.
மகிழ்வோடு
நாமூம் வாழ்வோம் - மனிதநேயம்போற்ற உலகமக்களையும் வாழவைப்போம்.