டிகிட்டல் பேய் பிசாசுகள்
ஐயோ....மகராசா....என்ன உட்டுப் போயிட்டியா ?
ராசா....இனி...நான் என்ன பண்ணுவேன்.....?
இந்த பாவி மவா உசுரோடு இருக்கேன்....!
இப்படி தவிக்க விட்டு தனியா போயிட்டியே...!
ஒ.......ஐயோ.......ராசா.......நான் இருந்து என்ன
என்னையும் கூட்டிட்டுப் போயா.....
தெரு முனையில் திரும்பிய போது
தெளிவாகக் கேட்டது ஒப்பாரிச் சத்தம் !
எனக்கு சற்று சந்தேகம்.....
எளவு ஏதாச்சும் விழுந்துடிச்சா...?
ப்ரெண்டு கல்யாணம்னு சொல்லித்தானே
இன்விட்டேசன் கொடுத்தான்......
சந்தேகத்தோடு பார்த்தேன்
சட்டைப்பைக்குள் திருமணப் பத்திரிக்கைதான் !
இது என்னடா எளவாப் போச்சி...?
இதயத்தில் படபடப்பு வீட்டை நெருங்கினேன்..
அங்கும் அதிர்ச்சி
சிரிச்ச முகத்தோடு
மாப்பிள்ளையும் பெண்ணும் டிவி
சீரியல் பார்த்தபடி இருக்க
டிஜிட்டல் சவுண்டில்
அந்த ஒப்பாரிச் சத்தம் இன்னும் அலறியபடி
வாங்க வாங்க என அழைத்தனர்
ஒரு நொடி குழம்பித்தான் போனேன்
நான் வந்திருப்பது
வெட்டிங் ரிசப்சனா இல்லை கொலை விழுந்த
எளவு வீடா ?
உறவினர் எவரும் இல்லை.........
காண்ட்ராக்ட் காரர்களே
கவனித்தார்கள் வந்தவர்களை
கேட்டதற்கு
அவர்கள் எல்லோரையும் அழைக்கவில்லை
கிராமத்துக் கிறுக்கர்கள்
நம் நாகரீகத்துக்கும் அவர்களுக்கும்
ஏணி வைத்தாலும் எட்டாது என்றான் நண்பன் !
டேய் டிஜிட்டல் பேயே...நீ
திருந்தவே மாட்டாயோ ?
உறவுகளை சாகடித்து விட்டு
உன்னை எல்லோரும் கட்டி அழுகின்றனர் !
நொந்து கொண்டு எனக்கு நானே
ஆடு புல் தின்பதாய் ரெண்டு சப்பாத்தி
அளவாக எடுத்துக் கொண்டேன்
செல்ப் சர்விசாம்.........
ஏனோ.....சிறுவயதில்.....கிராமத்தில்
அவனது வீட்டில் அவனது அம்மா
ஆள் உயர இலைபோட்டு
அன்போடு பரிமாறியது நினைவுக்கு வந்தது
அங்கே புகைப் படத்துக்குள்
அந்த தெய்வத் தாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தாள்....!
இதயம் ஒரு நொடி ஸ்தம்பித்து
இமைகளுக்கும் கண்ணீர் கசிந்தது