ஏடா தமிழா! இதுதான் உன் பாடா ?
ஏடா தமிழா !
எடுடா பேனா !
இந்த மூடர்
இனத்தின் மீது
போர்த்திக் கிடக்கும்
இழி நிலை இருளை
அகற்றிட!
ஆம்; அகற்றிட
எழுவாய்!
அனலாய் / புயலாய் !
அடுத்தவன் இல்லத்தில்
ஐந்து பேர் இறந்து
அங்கே
அழுது புரண்டு
ஒப்பாரி வைத்து இருந்தாலும்
இவன் கறிச் சோறை
நாய்க்குப் போடாமல்
தானே நக்கித்
தின்று தீர்ப்பான்
இந்தத் தடித் தோல் தமிழன்
ஆம் ;
அவன்தான் இன்றையத் தமிழன் !
இலவசம் என்றாலே
எவர் வசமும் போவான்!
தன்வசம் இருந்த
தன்மானம் - அதனை
இவன் தாயோடு
சேர்த்து வைப்பான் அடமானம் !
தன் பெண்டு தன் பிள்ளை
தன் குடும்பம் என என்னும்
கடுகு மனம் கொண்டிருந்தாலும்
பரவாயில்லை !
இவன்
தன் பெண்டு பிள்ளைகள்
வாழ
எத்தனைப் பெண்டு பிள்ளைகள்
அனாதை ஆனாலும்
பரவாயில்லை
என் எண்ணி வாழ்கிறானே
அதை எண்ணும் போதுதான்
இவன் எச்சில் இலை!
காமக் களி நடம்
புரிந்தவன்
ஸ்ரீ ல ஸ்ரீ சாமிகள் !
அவன் பித்தக் கால்களை
கழுவிக் குடிக்கிறான்
இந்தப் பித்தத் தமிழன் !
அவனை
அடித்து துரத்தாமல்
அவனிடமே
"நல்ல வழி காமி! சாமி !"
என்று நாடு ரோட்டில்
விழுந்து கும்பிடுகிறாள்
எங்கள் தமிழ்ச் சாதி மாமி !
அரசியல்வாதி மட்டுமா
இங்கே வியாதி ?
இங்கே வியாதிதான்
இவன் தலையில்
எழுதி வைக்கப் பட்ட விதி!
கல்விச் செல்வம்
கையூட்டுச் செல்வமாய்
மாறி
பாவம்
சரஸ்வதி
கல்விக்கோயிலில் இருந்து
தீட்டுப் பட்ட பெண் போல
தள்ளி வைக்கப்பட்டிருக்கிறாள்!
லக்ஷ்மியைக் கூட
மூதேவி காசு தந்தால்
இலட்சியம் பண்ண மாட்டார்கள்
இந்தத் தம்பிடித் தமிழர்கள் !
நல்லவர் எல்லாம்
கல்லறையில் ;
நாடு வாழ உழைத்தவர் எல்லாம்
நடு வீதியில் சிலை வடிவில் !
இன்று
கப்பல் ஓட்டிய தமிழன்
கப்பம் கட்டுகிறான் வெளிநாட்டில் !
கட்டபொம்முத் தமிழன்
டாஸ்மாக் கடையில்
ஊறுகாய் நக்கி
உச்சுக் கொட்டிக்
கிடக்கிறான் மல்லாந்து !
மற்ற தமிழன்
பொழுது விடிந்து
பொழுது முடியும் வரை
புழுவாய் நெளிந்தாலும்
மனப் புழுக்கத்தை
மனசில் புதைத்து
மண்ணில் கரைந்த
கடுகின் துகளாய்
மாறி வாழ்கிறான்
நடக்கும் சவமாய் !
மாற்றான் மனைவியை
ஓட்டிப் போகிறான்
பிறன் மனை நோக்காத பேராண்மை
போதித்த
வள்ளுவம்
போதிக்கிற வாத்தியானே !
அகல் விளக்குகள் இன்று
அடுத்த வீட்டுக்காரனை
அணைக்கும் விளக்குகள்
என்று மாறி வாழ்கிறார்கள்
கற்பின் கசடுகளாய்!
தேவைப்பட்டால்
தீர்த்துக் கட்டியும் விடுகிறா(ள்)ர்கள்
தாலி கட்டியவனை!
அதனால்
ஏடா தமிழா
எடுடா பேனா !
இந்த இழி நிலை
இருட்டுத் திரையை
எழுத்துக் கூர்மையால்
கிழித்து எறிவோம் !