[222 ] மீண்டும் பிறந்திருப்பேன்..!
உந்தன் அருகில் வந்தேன் -உனது
உணர்ச்சிக் காற்றெடுத்தேன் !
இன்றும் வாழுகிறேன் - என்
இதயம் நன்றிசொலும்!
உன்முகம் அருகில் கண்டேன் -அது
உதிர்த்த பூக்கள் கொண்டேன்!
என்மனம் மணக்குதடீ! -அங்கே
இன்றுமுன் பூசையடீ!
காந்த விழிகள் கண்டேன் ! -எனக்குள்
காயங்கள் ஆறுதடி!
மாந்த அருகில் வந்தேன் -இதழ்கள்
மறுக்கப் பசித்திருப்பேன்!
சேர்ந்த கருங்கூந்தல் -எனக்குள்
சிலிர்ப்பைத் தந்ததடீ!
நேர்ந்த கவிதைகளை -உலகம்
நித்தம் படிக்குதடீ!
மீந்த நாட்களிலே -உந்தன்
மெல்லிய நினைவுகளைச்
சோர்ந்தே விழும்வரைக்கும் -நெஞ்சில்
சுகமெனப் பூட்டிவைப்பேன்!
மீண்டும்உன் நாள்வரவே -இறையை
வேண்டித் தவமிருப்பேன்!
மாண்டும்,அந் நினைவுகளில் -நான்
மறுபடிப் பிறந்திடுவேன்!
-௦-
[பரிதி முத்துராசன் அவர்களின் "காதல் தவமிருந்தேன்" என்ற அழகிய கவிதையே என்னுள் இந்தக் கவிதையை எழுதத் தூண்டியது. அவருக்கும் அவரது கவித்திறமைக்கும் எனது நன்றிகலந்த பாராட்டுக்கள்!]