[223 ] கோலம்..!
மண்ணில் புகழ்மறந்து
மற்றெதுவும் நினைவிழந்து
...புண்ணாகி நான்கிடக்கும் கோலம்,
கண்ணால் புள்ளி வைத்துக்
கார்குழலால் கோடிட்டே
...அண்ணாக்க நீயிட்ட கோலம்!
......[ அண்ணாக்க-மேல்நோக்கியவாறு இருக்க]
தன்னை மறந்தவனாய்த்
தன்பொருளை விட்டவனாய்
...‘பன்னாடை’ எனும்,எனது கோலம்
சின்னப்பல் பொட்டிட்டுச்
செவ்விதழால் வரியிட்டு
...சின்னதாய் நீபோட்ட கோலம்!
.....[பன்னாடை -மூடன் ][இழை நெருக்கமில்லாத துணியும் ஆம்]
பொய்யை மெய்யென்றும்
பொல்லாப்பைப் புகழென்றும்
...ஐயப் படவாழ்வேன் கோலம்
கைநகத்தைப் பொட்டாக்கிக்
கையசைவில் வரியோட்டி
...பையநீ பார்த்திட்ட கோலம்!
.....[பொல்லாப்பை>>துன்பத்தை]
கரிந்த மரமாகக்
கடந்தபுயல் நிலமாகச்
...சரிந்த வீடெனும்,என் கோலம்
சிரிப்பு முத்திட்டுச்
சிற்றிடையால் கோடிட்டு
...இருந்தோடி நீயிட்ட கோலம்
-௦-