[253 ] வலிக்கும் என் நெஞ்சம் !

வலிக்குமென் நெஞ்சம்! வலிக்குமென் நெஞ்சம்!
வறிய நிலத்தின் சிறியிலை நெருஞ்சி
கண்கவர் புதுமலர் முள்ளா வதுபோல்,
கூப்பிய கரத்துநம் வேட்பா ளர்கள்,
மக்கள் வாக்கை மதித்து வந்தவர்,
தக்கவ ராகத் தலைமை ‘மன்றம்’
தாம்சென் றதுமே ஆம்தொழில் பணத்தைச்
சேர்ப்பது வொன்றே சிந்தனை யாகினர்!
வாக்களித் தோரின் வாழ்நலம் மறந்தனர்!
ஊக்குவ தெல்லாம் ஊழலாய்
வாய்மொழி மறந்தார்! வலிக்குமென் நெஞ்சே!
-௦-
[குறுந்தொகை 202-ஆவது பாடலின் ’புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்(கு)’ என்ற சொற்களைப் படித்து எழுதியது]

பொருள்:
என் நெஞ்சு வலிக்கின்றது! என் நெஞ்சு வலிக்கின்றது! நீர் குறைந்த நிலத்தில் தோன்றும்
சிறிய இலைகளை உடைய நெருஞ்சிச் செடியின் கண்ணுக்கு இனிய புது மலர், பின்னர் தானே முள்ளாக மாறுவது போல,
கூப்பிய கரங்களுடன், மக்களின் வாக்குகளை மதித்து வந்த வேட்பாளர்கள் , வெற்றி என்ற தகுதியைப் பெற்று, சட்ட/ பாராளு மன்றங்களுக்குச் சென்ற வுடன் தமது தொழில் பணம் சேர்ப்பது ஒன்றே என்பதுபோல் சிந்திப்பதும்,, வாக்களித்தவர்களின் வாழ்க்கைக்கான நலன்களைச் செய்து கொடுக்க மறந்து விடுவதும்
மேலும் மேலும் ஊழல் பெருகுவதை ஊக்குவிப்பதும், தாம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டதும் [கண்டு] எனது நெஞ்சில் வலிக்கின்றது.
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (12-Jun-12, 9:01 am)
பார்வை : 253

மேலே