புதிய பசி.
புதிய பசி.
================================ருத்ரா
மானுடம் காக்க
மனித சங்கிலி
கோர்த்துக்கொள்ளும்
மனித நண்பர்களே!
உலகத்தின்
எல்லா உயிர்த்தொகுதிக்குள்ளும்
ஒரே பூவாய்
மலர்ந்து நட்பு வீசும்
தருணம் இதோ வந்துவிட்டது.
இனி
உங்கள் எல்லா
இதயநாளங்களையெல்லாம்
ஒன்றாய்
முடிச்சு போட்டுக்கொள்ளுங்கள்.
கசாப்பு கத்திகளுக்கு
விடுமுறை கொடுங்கள்.
கிலோவுக்கு
ஆயிரம் ரூபாய் கொடுத்து
அபூர்வமீனை
பொரித்து தின்னும்
பழக்கத்தை தள்ளி வையுங்கள்.
வள்ளலார் தத்துவம் கூட
வாய்க்கும் செவிக்கும் மட்டுமே
ருசியாய் இருக்கிறது.
வயிறு
மறுக்கிறதே!
அறிவு பூர்வமாய் பார்த்தால்
"குப்பை"க்கீரையின்
தலையை கொய்து கூட
நம் பசியாறுவது பாவம் அல்லவா!
என்ன செய்வது?
கொல்லாமை விரதத்தை
கொள்ளுவது தான் எப்படி?
உயிர் தோன்றியது
உயிர்களைத்தின்றே
உயிர் தோன்றியது!
உயிர்களைக்கொன்றே
உயிர்ச்சங்கிலி தொடர்வது
இயற்கை தந்த முரண்பாடு.
சிலிகான் புரட்சி
செய்யத்தெரிந்த மனிதனே!
மண்ணையே உணவாக்கிக்கொள்ளும்
புதிய புரட்சி ஒன்றை
கற்றுக்கொள்.
வெறும் வெளியை
உணவாக்கிக்கொள்ளும்
விஞ்ஞானம் ஒன்றைக் கண்டுபிடி.
அன்பு மதம்
அப்போது தான்
அர்த்தத்தோடு
இந்த உலகத்தில்
புஷ்பிக்கும்.
உயிர்களின்
சங்கீதம் அப்போது தான்
உயிர்களுக்குள்
எதிரொலிக்கும்.
ஓ!மனிதனே!
எல்லாவற்றிற்கும்
தயாராய் இரு.
துப்பாக்கிகளை தின்று
செரித்து
துப்பாக்கிகளை
விவசாயம் செய்ய நினைக்கும்
உன்
வெறிபிடித்த பசியை
நிறுத்திவிட்டு
உன் மனப்பசியை கிளற விடு.
சிந்தனையை
உண்டு வாழும்
ஒரு அதிசய உலகை நீ
கண்டுபிடி.
ஆம்.
மனிதா!
நீ எல்லாவற்றிற்கும்
தயாராய் இரு.
======================================ருத்ரா