நாமெல்லாம் தமிழர்தானா?
வீறு கொண்ட வேங்கையொன்று
விடுதலைக்காய் பசித்திருக்க,
உண்டு கழித்து
குலவுகிறோம்
நாமெல்லாம் தமிழர்தானா?
உணர்ச்சிகள் மட்டும் உணவாக்கி
கனவுகள் கொண்டு துணிவாகி
பார் திருப்பும் பெருமகனை
சேராதிருக்கிறோமே,
நாமெல்லாம் தமிழர்தானா?
சோர்ந்துவிழும் நாடிகளில்
சுள்ளென பாயும் குருதியோட்டம்,
உயிர்ப்புகளை உதறித்தள்ளி
உறைந்துவிடும் மூலைகளில்.
வலு ஒன்றும் சேர்க்காது
முலைகளிலே முகம்புதைத்து
கட்டில்களில் வியர்த்தெழுந்து
கண்டன அறிக்கையிடும்
கனவான்கள்,
நாமெல்லாம் தமிழர்தானா?
சேர்த்தணைக்கும் இரவுகளில்
முறுக்கேறும் நரம்புகளில்,
நின்றொலிக்கும் சாவு மணி
தள்ளி நின்று நகையாடும்.
இவையொன்றும் புரியாது
தமிழ்தாயின் கடை மகனாய்
வெட்கமின்றி ஆடையுடன்
வீதிகளில்,
நாமெல்லாம் தமிழர்தானா?
அன்னையவள் பூபதிதான்
தடம் காட்டி உரமூட்ட
வெருண்டெழுந்த தீபங்களும்
இருள்விலக்கி தெரு காட்ட
தனித்தனியாய் இத்தனையும்
தரணி தலை தொட்டதென்றால்
ஊர் கூடி உருக்கொண்டு
வெருண்டெழுந்து புறப்பட்டால்
வேரறுக்கும் விஷமிகளை
விரட்டிடலாம் உலகைவிட்டு......