அன்பில் வழியும்
வெட்ட வெளி வானில்
பட்ட வெயில் காயும்
பொட்ட மண்ணில் புழுவாக,
துடி துடித்தாய்!
நட்ட நடு வெளியில்
நட்டு வைத்த செடியாய்
ஒத்தப் பூ உயிர் வாழ,
புயல் எதிர்த்தாய்!
இதழ்களைத் திறவாமல்,
என் உயிர் காத்தாயே!
புயல் நின்ற பின்னாலும்,
மலரவே மறந்தாயே!
படப் பட பொறுத்ததென்ன? - தாயே
பட்ட வலி மறைத்ததென்ன?
படப் பட குனிந்ததென்ன? - சேயும்
சுடச் சுடச் சிரித்ததென்ன?
பாடங்கள் படைத்தாய்,
பண்புகள் புரிந்தாய்,
அன்புகள் சொட்டச் சொட்ட,
வழிந்ததென்ன?
பொத்திப் பொத்தி வளர்த்தாய்,
பட்டதெல்லாம் மறைத்தாய்,
முந்நூறு திருநாட்கள்,
எனை சுமந்தாய்.
விட்டு விட்டு தூறும்
துன்பமெல்லாம் மாறும்,
அடைமழை காத்திங்கு,
உனை சுமப்பேன்.
தவறுகள் செய்தாலும்,
தாய்மனம் வாடாது.
தவிர்த்திட நினைத்தாலோ,
பூமனம் தாங்காது.
படப் பட பொறுத்ததெல்லாம், போதும்.
பட்ட வலி துடைத்தெறியும்
காலங்கள் கனியும்,
தாய்மனம் செழிக்கும்,
இன்பங்கள் சொட்டச் சொட்ட
வழிந்திடுமே!
வைரமுத்து அவர்களின் "தொடத் தொட மலர்ந்ததென்ன" என்ற
பாடலின் தாக்கத்தால் எழுதியது.