வைரமுத்து கவிதை ( 3. தயவு செய்து என்னை தொல்லை செய் )

இந்த படைப்பின் இறுதியில் தான் கவிஞர் கவிதைக்கு எடுத்த கருப்பொருளே புரியவரும்.மிக அருமையான சொல்லாடல் கொண்ட படைப்பு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக டெல்லி புறப்படும் போது அந்த அலுவலின் நடுவில் இந்த கவிதையை கண்டு பாராட்டி பேசியுள்ளார்.

கவிதையை காண ஆவலாய் உள்ளதா இதோ கவிஞரின் அந்த படைப்பு .....


தயவு செய்து என்னை தொல்லை செய்
`````````````````````````````````````````````````````````

தயவு செய்து
என்னை தொல்லை செய் !
தயவு செய்து
என்னை கொள்ளையடி !
கழுத்தோரத்தில் ஒரு
செல்லக் கடிகடி
கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு !

ஓடிப்பிடித்து என்னை
உருக்குலைத்துப் போடு !
குளித்துவரும் என்னை
மீண்டும் அழுக்காக்கு !
எதிர்பாரா இடத்தில்
என்னைத் தீண்டு !
எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு !

எங்கே என்
உயிரென்று கண்டுபிடி
அதில்
இடவலம் தொடு
இதுதான்
இதுதான் நான் கேட்டது.
உதட்டு எச்சிலால் என்
உடல் பூசு !

முத்தமிட்டு என்
மூச்சை நிறுத்து !
இதுவொன்றும்
ஒருவழிப்பாதையல்ல,
என்பங்கு செலுத்த
எனக்கும் இடம்கொடு !
அங்கங்கே பரவு
எலும்பின் மஜ்ஜைகளில் ஊடுருவு !

மார்பகப் பள்ளத்தில்
முகம்வைத்து மூச்சுவிடு !
மேகங்களுக்கிடையில்
நட்சத்திரம் தூங்கினாலும் ,
இலைகளுக்கிடையில்
காற்று தூங்கினாலும்
என்கண்கள் உனக்காக
இரவெல்லாம் விழித்திருக்கும் ......

உனக்கில்லாத உரிமையா ?
பூனையின் பாதம் பொருத்தி
பொசுக்கென்று வந்து புடவை இழு !
தீவிரத்தால் என்னை திணறவை !
என்னை தூண்டிவிட்டு
எங்கேயோ ஒளிந்துகொண்டு
நித்தம் ஒருதடவை
என்னை அழவை !

என் பெண்மையின் பரிபூரணமே
என் வெற்றிடம் வழிய
நிறைந்த நிறைவே !
தாழாத தனங்கள்
தாழ்ந்தன உனக்காக !
ஆகாய கங்கை
பாய்ந்தது உனக்காக ............


வா !
என்னை வலி செய் !
உயிர்பருகி ஒலி செய் .
என்னுயிர் பயிராகும் - நீ
பல்பதித்த பள்ளத்தில் !
எனக்குள்ளே பூப்பொழியும் - நீ
முட்டும் அதிர்வில் .
உன் நகர்த்தலுக்காக
துடிக்குதென் ஆடை !

உன் நகம் கிழிக்க
வீங்குதென் மார்பு .
தொட்டுக்கொண்டுறங்கும்
சுகமொன்று கருதி ,
உடலென்ற உலையில்
கொதிக்குதென் குருதி...........

நீதந்த சுகமெல்லாம்
நெற்றியில் தீ எறியும்
தியானத்தில் வந்ததில்லை !
வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை !
பிரசவம் முடிந்த
பெருமூச்சில் கொண்டதில்லை !
எங்கே மீண்டுமொருமுறை
முந்தானைக்குள் புகுந்து
முயல்குட்டி ஆகு .

தட்டாதே
தாய்சொல்லைக் கேள் ,
பத்துமாதம் என் வயிறு சுமந்த
பிஞ்சுப் பிரபஞ்சமே ! ..............................

எழுதியவர் : வைரமுத்து (29-Sep-12, 4:29 pm)
பார்வை : 3564

மேலே