முதுமைக் காலம்
மண்ணில் பிறந்த மனிதர் யாருக்கும்
முடிவின் தொடக்கம் முதுமைக் காலம் !
இன்பம் தங்கிடும் இறுதிவரை சிலருக்கு
துன்பம் தாக்கிடும் பலரை பலவழியில் !
மூப்பும் நரையும் முதுமையின் சின்னம்
முகமும் மாறிடும் என்பது திண்ணம் !
முன்னோரை நினைத்து முனகுவர் சிலர்
வரும்நாளை எண்ணி வருந்துவர் பலர் !
இளமைக் காலத்து இனிய நிகழ்வுகள்
இதயக் கடலின் இன்பமிகு அலைகள் !
புயலாய் கடந்த துயர்மிகு தருணங்கள்
விழிகளில் தெரியும் வழியும் வருத்தம் !
நடந்ததை நினைத்து நாட்களை நகர்த்தாமல்
முதிர்ந்த வயதிலும் முனைப்புடன் இருந்திட்டு
விரும்பும் செயலில் வேகமுடன் ஈடுபட்டால்
வருகின்ற நொடிகள் வசந்தமாய் அமைந்திடும் !