எப்போது தீபாவளி ?
கொடுமைகள் பல புரிந்தே
கொடியன் எனப் பெயரெடுத்த
"நரகாசுரன்"என்போன்
இறந்த நாளே தீபாவளியாம்!
அவன் இறந்த நன்னாளில்
தீபங்கள் ஏற்றி வைத்துத்
தெருவெங்கும் கொண்டாடியதால்
தீப ஒளித் திருநாள்தான்
தீபாவளியாய் மாறியதாம்!
தொப்புள் கொடி உறவாம்!
தொன்றுதொட்ட உறவாம்!
அருகினில் உள்ள நாடாம்.
அன்பான இலங்கை மண்ணில்
ஓரிரண்டாண்டு முன்பு,
ஒரு கொடுமை நடந்தய்யா!
நாடாள்வோர் கொடுமை கண்டு
காடாள்வோர் கோபம் கொண்டு
கிளர்ந்திட்ட புரட்சித் தீயில்
பல கொடுமை நடந்தய்யா!
உலகமே சதி செய்து
ஓரணியில் நின்றுகொண்டு
பரிதவித்த எம்மக்கள்மேல்
பாஸ்பரஸ் குண்டு பொழிந்ததய்யா!
ஐயோ!ஐயையோ!
என்றழுத எம்மக்களுக்கு
ஆறுதல் சொல்லக்கூட
ஒரு நாதி இல்லை அய்யா!
"அன்புணர்வு"கொண்ட எங்கள்
அக்கா தங்கைகளிடம்
"வன்புணர்வு"கொண்ட சில
கொடுமைகளும் நடந்தையா!
அருகினிலே உள்ள நாட்டில்,
அரசியல் பேசிக்கொண்டு
தெருவினிலே திரிந்தோம் நாங்கள்
தெய்வகுத்தம் செய்துவிட்டோம்!
அன்பு கொண்ட பலர் அன்று
அரசிடம்தான் முறையிட்டோம்!
அண்டை நாட்டுறவு வேண்டும்
அமைதியாய் இருங்கள் என்றார்!
இயன்றவரை எடுத்துக்கூறி
இயலாமல் போனதெண்ணி!
"முத்துக்குமார் "போன்ற சிலர்
தீக்குளித்தே இறந்து போனார்!
கொடுமைகளை ஏவி விட்ட
கொடுங்கோலன் "நரகாசுரன்"
இன்று கூட வாழ்கின்றான்
இலங்கையின் அதிபராக!
இன்றும் எம்மக்கள்
இன்புற்று வாழவில்லை,
முள்வேலி முகாமுக்குள்
முடங்கித்தான் போய்விட்டார்கள் !
இந்தக் கொடுமை எல்லாம்
இன்றுவரை நிற்கவில்லை!
இனிமையான எம்மக்கள்
இப்போதும் வாழவில்லை!
ஐநா சபையினிலே
அவன் ஓர்நாள் பதில் சொல்வான்.
"பக்ஷேக்கள்"கூட்டமெல்லாம்
பரலோகம் போகும் அன்று!
அப்போது
பட்டாசு மட்டுமின்றிப்
பட்டாடைகளும் உடுத்துப்
பெருமையுடன் கொண்டாடுவோம்
பெருநாளாம் தீபாவளியை!