தீபாவளி கொண்டாட்டமும் திண்டாட்டமும்
ஓன்று வாங்கினால்
இரண்டு இலவசம்!!!
அப்படியென்றால்
மூன்று வாங்கினால்...
எத்தனை கிடைக்கும்?.
விரல்களை மடக்கி
எண்ணி முடிப்பதற்குள்
தீபாவளி முடிஞ்சிடுமோ....?
அட...டா....
இந்தத் தீபாவளிக்கு
ஒரு புதுச் சட்டை
வாங்கினால்…..
அடுத்தத் தீபாவளி வரை
புதுசு வாங்க வேண்டாமே!
அவசரமாக ஓடி
அங்காடித் தெருவில்
அங்கும் இங்கும் அலைந்து
கடைக்குள் நுழைந்து
மக்கள் வெள்ளத்தில்
நீந்தோ நீந்துனு நீந்தி...
அது
பிறந்த குழந்தை போடும்…
பாப்பா சட்டையாம்.
இப்படித்தான்
அங்காடித் தெருவெங்கும்
அலம்பல்கள்.
இன்னொரு கடையில்
பத்தாயிரத்துக்கு
பொருட்கள் வாங்கினால்
பத்து கோடி மதிப்புள்ள
பரிசுப் பொருட்கள்.
இன்னொரு கடையில்
வாங்கினாலும்
வாங்காவிட்டாலும்...?
கூப்பனை பூர்த்திச் செய்தால்
உலகையே சுற்றி வரலாம்!
ஒரு நகைக்கடை வாசலில்
வெளிநாட்டு சொகுசு கார்
நகை வாங்குவோருக்கு
பம்பர் பரிசு......
அம்மா...தாயே!
அடுத்த தீபாவளிக்கு
அள்ளிப்போடுங்க போனஸ....
அரசாங்க ஊழியருக்கும்
அரசாங்கம் அமைக்க…..
ஓட்டுப்போட்ட மக்களுக்கும்.
அங்காடிக்காரர்களே!
அடுத்தத் தீபாவளிக்கும்
இப்படி ஏதாவது போடுங்க...
வாங்குறேனோ...?
இல்லையோ
வந்து பார்க்கிறேன்?