சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

அடுத்த தெரு
அண்ணாச்சி கடை!

முட்டு சந்து
முதலியார் கடை!

சாலையில் உள்ள
செட்டியார் கடை!

பட்டு விற்கும்
நெசவாளர் கடை!

லட்டு விற்கும்
லாலா கடை!

புட்டு விற்கும்
சேச்சி கடை!

தோசை விற்கும்
ஆப்பக் கடை!

பீடா விற்கும்
சேட்டுக் கடை!

கட்சி பேதம் எதுவுமின்றி
காப்பி குடிக்கும்
நாயர் டீ கடை!

அனைத்தும் இழுத்து
மூடியாச்சு!

அந்நியக் கடைகள்
வந்தாச்சு!

இனி

செட்டியாரிடம்
கால் காசு
ஏமாற வேண்டாம்!

அண்ணாச்சியிடம்
அரைக் காசு
ஏமாற வேண்டாம்!

முதலியாரிடம்
முழுக் காசு
ஏமாற வேண்டாம்!

முழுவதுமாக ஏமாற
அந்நிய முதலைக்கு
அனுமதி வழங்கியாச்சு!

சில்லறை வணிகம்
அனைத்திலும்
அந்நிய முதலீடு
செய்தாயிற்று!

மத்திய அரசுக்கு
மகத்தான வெற்றி!
மக்கள் நமக்குத்தான்
மாளாத தோல்வி!

அன்றே முழங்கினான்,
அருமை பாரதி!

ஆயிரம் உண்டிங்கு சாதி!
எனினும்
அன்னியர் வந்திங்கு
புகல் என்ன நீதி! என்று!

இனி
மாண்புமிகு பிரதமரின்
மறைக்கப்பட்ட காதுகளுக்கு
இவையெல்லாம்
கேட்கவா போகிறது?

(நண்பர்கள் இதைப் பற்றிக் கருத்துகள் கூறுங்களேன்)

எழுதியவர் : கோவை ஆனந்த் (7-Dec-12, 9:03 am)
பார்வை : 255

மேலே