நாச்சியா...!!

ஏண்டா பொன்னப் பயலே........ஏண்டா பொம்பளப் புள்ளைய கூடவே வெளயாடுற பொம்பள சட்டி மாதிரி... இவ்ளோ கோபமா அப்பா கத்தி நான் பாத்தது இல்லை.......எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சு..... ! ஏண்டா ஆறாப்பு படிக்கிற கழுத எப்ப பாத்தாலும் என்னடா பொம்பளை புள்ளைக கூட...ம்ம்ம் .பயலுக கூட போய் விளையாடுடான்னு மறுபடியும் கத்துனாரு...!

நான் காத பொத்திகிட்டே.... சொன்னேன் ஏப்பா எனக்கு பயலுக கூட வெளயாட பயமா இருக்குப்பா கூச்சமா இருக்குப்பான்னு சொல்லவும் என்னைய இழுத்துட்டு போயி சாத்து சாத்துனு சாத்திட்டாரு....! அதான்.. இப்ப அழுதுகிட்டு படுத்து இருக்கேன்....!

முன்னாடி எல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இப்பத்தான் என்னைய ரொம்ப அசிங்கபடுத்துறாக எனக்கும் என்ன நடக்குது எனக்குள்ளனு புரியவும் மாட்டேங்குது. மனசும் எப்பவும் திக்...திக்னு அடிச்சிக் கிட்டே இருக்கு. பள்ளிக்கூடத்துல கூட பயலுக பக்கதுல உக்காரயில ஒரு மாறி கூச்சமா இருக்கு. அவங்கள பாக்கும் போதே ஒரு கூச்சம் வருது...! ஒரு நாள் எங்க டீச்சர் கிட்ட சொன்னேன்....எனக்கு இங்க உக்கார பயமாருக்குன்னு....!

அட லூசுப் பயலேன்னு திட்டிட்டு.. நீ என்ன ஒன்போதான்னு கேட்டாக....? ஒம்போது அப்படீன்னா என்ன டீச்சர்னு கேட்டப்ப நீதான்டா லூசுப்பயலே முருகானு சொன்னது கூட பெரிசா தெரியலீங்க. கூடப்படிக்கிற பிரண்சுக எல்லாம் என்னைய சுத்தி சுத்தி வந்து.... ஏய்.. ஒம்போது முருகா... டொய்ங் டொய்ங் டொய்ங்னு கிண்டல் பண்ணினத என்னால மறக்கவே முடியல.... !

இப்போ எல்லாம் என் பொழப்பு நிதமும் அழுகறதாவே போச்சு? அம்மா மட்டும் சொல்லும் டே முருகேசு ஆம்பளைடா நீன்னு நிதானாமா தைரியமா இருடான்னு...எனக்கு அழுகையா வரும் அம்மா..ஒரு நாளு எனக்குப் பயலுக கூட உக்கார செரமமா இருக்குமான்னு சொன்னேன்... அதுக்கு அம்மா வெளக்கமாறு பிஞ்சி போகும்னு அதட்டவும் நான் போயி ஒரு மூலையில உக்காந்துகிட்டேன்.

இப்படி இருக்காத... இருக்காதன்னு எல்லோரும் சொன்னாங்களே தவிர ஏன் இப்டி இவனுக்கு தோணுதுன்னு யாருமே விளங்கிக்கல....எனக்கே விளங்கல..! எட்டாப்பு படிக்கிறப்பதான் வெளங்கிகிட்டேன் அதுவும் ப்ரண்சுக மூலமாத்தான்.. ஆமாங்க....எனக்கு உடம்பும் குரலும் மட்டும் ஆம்பிள மாதிரி இருக்கு ஆனா என் மனசுல நான் ஒரு பொண்ணாதான் இருக்கேன்....!

எனக்கும் இப்ப எல்லம் நல்லாவே வெளங்கிப் போயிருச்சுங்க...என்ன மாறி இருக்குற பொறப்பு எல்லாம் ஆம்பளையும் இல்லையாம் பொம்பளையும் இல்லையாம்...குறையா பொறந்துட்டோமாம்...அலியாம், ஒம்பாதாம், பொட்டையாம்... அரவாணியாம்.... நாகரீகமா இப்ப திருநங்கைனு சொல்றாங்களாம்....

குறையா பொறக்குறதுன்னா என்னனு ஒரு நாள் எனக்குள்ளேயே கேள்வி கேட்டு கேட்டு அழுதுட்டு இருந்தேன்..தனியாத்தான்..! எங்க வீட்ல என் அக்காளுங்க இருக்காளுக ஒத்தையில்ல ரெண்டு பேரு இருக்காளுக எனக்கும் நேர் கீழ தம்பிப் பய இருக்கான் ஒருத்தன்.... எனக்கு நல்ல பாசம்ங்க இவுங்க மேல எல்லாம்...ம்ம்ம்ம்ம் ஆனா நான் பக்கதுல போனாலேயே என்னிய அருவருப்பா பாப்பாங்க....என்கிட்ட பேசவே மாட்டங்க இவுங்க எல்லாம்....

கூடப்பொறந்த பொறப்புகளே புரிஞ்சுக்கல பெத்த தாய் தகப்பனே அறிஞ்சுக்கல..என் கதைய சாமியா கேக்கும்...? அது இருக்கா இல்லையான்னே தெரியலை அது எப்படி கேக்கும்.....! ஒரு நா ராத்திரி வீட்ல எல்லோரும் திருவிழாக்குப் போயிட்டாங்க பக்கத்து தெருவுலதான் கோயிலு! என்னவோ தெரியலை என்னிய கூட்டிட்டு போனா அசிங்கமா இருக்குன்னு விட்டுடு போய்ட்டாங்க. எனக்கு செத்துடலாமான்னு கூட தோணுச்சு ஆனா பயமாவும் இருந்சுச்சு.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசங்க...அத இன்னிக்கு நெறவேத்திப் பாக்கலம்னு நினைச்சேன்....! உங்க கிட்ட சொல்லவா.....?

ஆருகிட்டயும் சொல்லக்கூடாது சரியா....? காதைக் கொடுங்களேன்.. அட நீங்களாச்சும் கிட்டவாங்க.. நான் என்ன கடிச்ச திங்கப் போறேன்....அச்ச்சோ....எனக்கு வெக்க வெக்கமா வருது...சொல்லட்டுமா? அது வந்து......அது....அது....

எங்க அக்கா பாவடை தாவணி கட்டிப் பாக்கபோறேன்.....? என் மனசறிய எஞ்சாமி சத்தியமா நான் பொண்ணுதானே...இருங்க.. இப்ப கட்டிகிட்டு வந்து காட்டுறேன்....
இந்த கத்திரிப் பூ கலரு தாவணின்னா எனக்கு அம்புட்டு இஷ்டம்....ம்ம்ம்ம் அந்த மஞ்சக்கலருபாவடை ஜிகினா நெறைய இருக்கும்....பூப்போட்ட டிசைன் எனக்கு உயிரு....அந்தக் கண்ணாடி வளைய.. ம்ம்ம் இன்னும் அவ வச்சு இருக்குற பூராத்தையும் எடுத்து போட்டுகிட்டேன்...பொம்பளை போடுற எல்லா ட்ரெசும்தான்..! பொட்டு வச்சிப்பாத்தேன்...கன்ணுக்கு லேசா மை போட்டுகிட்டேன்... !

எனக்கு கொலுசுன்னா உசுரு தெரியுமா? எனக்கு போடணும்னு கொள்ளை ஆசை....! முடி நல்லா வளர்த்துக்கணும் இனிமேன்னு நெனச்சுகிட்டே மெல்ல நடந்து பாக்கயில........என்னிய பாத்தா எனக்கே அழாகா தெரிஞ்சுச்சு........அச்சச்சோ... யாரோ வார சத்தம் கேக்குதே.....நான் பயத்துல ஓடிப்போயி ஹால்ல எட்டிப் பாத்தா....

திருவிழாவுக்க்கு போனவுங்க மழை வந்துடுச்சுன்னு திரும்பி வந்துட்டாங்க.......அம்மா, அப்பா, தம்பி, அக்காங்க....எல்லார் முன்னாடியும் நான்....

நடு ராத்திரி மணி பன்னென்ட தாண்டி போச்சு..தொடைல அம்மா போட்ட சூடும்....முதுகல அப்பா அடிச்ச அடியும் தம்பியும் அக்காவும் காறித்துப்புன எச்சியோடயும் படுத்த எனக்கு தூக்கம் வரலை. என்ன பொறப்புடா சாமி என்ன பொறக்கவச்சே.....? எல்லா மனுசங்களுக்கும்....மனசுதான் அவுங்கனு வாழ்றப்போ என்னப் போல பொறப்புகள ஏன் மனச வச்சி மதிக்காமாட்டேங்குது சனம்......

மனசுக்குள்ள பொண்ணா இருக்குற எங்களுக்கு உடம்பு ஆம்பளை மாறி இருக்கு.இதுல என்ன பெரிய தப்பு இருக்கு? எதுலயும் சேத்தி இல்லனு நீங்கதானடா சொல்றீங்க....? குறையோட பெத்து தொலைச்சுட்டேன்னு என்ன பெத்த அம்மாவே சொல்றாளே...? இது எந்த ஊரு கதடியம்மா?

இடையில வந்தாதானே கொற? பொறப்புலயே நாங்க இப்படி இருக்கறது எப்படி கொறையாகும்.. நாங்க முழுசுதான்....நாங்க இருக்குற மாறியே இருக்குறதுல நாங்க முழுசுதான். ஆண்டவனே ஆம்பளையும் பொம்பளையுமா நின்னு கையெடுத்து கும்புடுறீக....பெத்த புள்ளைய அப்டி இருந்தா அடிக்கிறீங்க....!

இனி அந்த வீட்ல இருக்கமாட்டேன்..! வீட்ல எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும் போதே முடிவு பண்ணினேன்...ஆமாம்.. நான் போறேங்க...! என்னால தூக்குப் போட்டு சாகப் போறேன்னு எங்கப்பா சொல்றாரு, எல்லாருக்கும் அவமானமா நான் ஏன் இருக்கணும்? அப்பா சட்டைப் பாக்கெட்ல இருட்ல கைவிட்டேன்.... கையில கிடச்ச 500 ரூவாயும்,,, நான் கட்டியிருந்த பாவடை தாவணியோடயும் போறேன்.....

என்ன கலங்கடிச்சுப் புட்டாங்க...நான் போறேன்...!

" பெத்தவ புள்ளையில்லேன்னு
என்ன வெறுத்து ஒதுக்கி புட்டா
மனசே இல்லாத மாருல
நான் குடிச்ச பாலெல்லாம் விசம்தான?
என்ன பெத்த அம்மாவே
உன்ன விட்டு நான் போறேன்....!

என்ன காத்து நீ வளப்பேன்னு
உன்ன அப்பான்னு நாஞ்சொன்னேன்..
என் கழுத்த நெறிச்சுக்
கொல்ல வந்த கொடுமையிலே
உன்ன விட்டு நான் போறேன்
என்ன பெத்த அப்பாவே...!

கூடபொறந்தியளே
என் கூட இருப்பியன்னு
நான் கண்டு வச்ச கனவெல்லாம்
எம் மேல எச்சி துப்பி
அழிச்சு போட்டியளே..
ஏன் கூட பொறந்த மக்கா
வெகு தூரம் நான் போறேன்..."

வாசல தாண்டி நான் வீதிக்கு வந்துட்டேன். வானத்துல நிலா இருந்துச்சு....? நீ ஆம்பளையா பொம்பளையான்னு பொச கெட்டத்தனமா கேட்டு நானே சிரிச்சுகிட்டேன்....அதுகளையெல்லாம் சனம் எந்த கேள்வியும் கேக்காம விட்டு வச்சிருக்கே? ஆதாயம் கொடுக்குற எல்லாத்தையும் கேள்வி கேக்காதுக சனங்க...! எனக்கு நான் கட்டியிருந்த தாவணி பாவடையும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....உலகம் பெருசு...எப்படியாச்சும் பொழச்சுக்குறேன்....

நானா பேசி இருட்டுல நடக்கும் போது... எதித்தாப்பல யாரோ வர்ற மாதிரி தெரிஞ்சுச்சு...."ஏய் யார்றி நீ...." தூரத்துல இருந்து இருட்ல இருந்த என்னை கேள்வி கேட்டுகிட்டே கிட்டக்க வந்தாங்க...." நான் பஸ்ஸாண்டுக்கு போறேங்க...."ன்னு பதில கொஞ்ச வேகமாவே சொன்னேன்...." ஏய் இங்க பாருட..இங்க......அலி ஹி ஹி ஹி...." சிரிச்சுகிட்டே என் கைய புடிச்சு இழுக்கவும் எனக்கு பயமா போச்சு.....

"ஏய் இஞ்சேருங்க விடுங்கடா என்னைய நான் சின்னப்புள்ளடா." சொல்லிகிட்டு இருக்கும் போதே....ரெண்டு பேர்ல ஒருத்தன் அவன் முகத்த என்கிட்ட கொண்டு வர இன்னொருத்தன் என்னைய இடுப்போட சேத்து புடிச்சுகிட்டான்........அவனுக குடிச்சிருந்த சாராயம் நாத்தம் என்னால முடியலை. இருட்டு அவுங்களுக்கு ரொம்ப சாதகமா போச்சு..........டேய் விடுங்கடா. டேய்..........முதுகெல்லாம் வலிக்குதுடா.... டேய்....கால்ல சூடுடா..எரியுதுடா டேய்........டேய்....மயங்கிட்டேன்..............

கண்ண தொறந்து எந்திருக்கும் போது....உடம்பெல்லாம் ரணமா வலிச்சுது.ரெண்டு வெறி நாயும் என்ன பண்ணிச்சுங்கனு தெரியல.. என் தொடைல அம்மா சூடு வச்ச இடத்துல ரத்தம் வழிஞ்சு காயம் பயங்கர வலியா இருந்துச்சு...ஏதோ என்ன பண்ணிருக்காங்க புரிஞ்சும் புரியாம இருந்துச்சு....எனக்கும் 15 வயசு ஆச்சுல்ல.....

என்ன மாதிரி பொறப்பு எல்லாம் அலின்னும், ஒம்போதுன்னு கேலி பண்ற நல்ல மனுசங்களா? நீங்க சொல்ற மாறி நீங்க எல்லாம் நல்லாத்தானடா பொறந்திருக்கீங்க? ஏன்டா பொறம்போக்கு நாய்ங்களா என்னைய மாறி ஆளுகள சீண்டுறிங்க...
ஒழுங்கா பொழப்பு தலைப்பு கொடுத்தா ஏண்டா.. எங்கள மாறி ஆளுக எல்லாம் பாலியல் தொழில் செய்ய வர்றோம்..? போராடி போராடி குடியரசு ஆகி இம்புட்டு நாளு ஆகி இப்பத்தான எங்களுக்கு ஓட்டுரிமையே கொடுத்துச்சு அதுவும் தமிழ் நாட்ல மட்டும்...! அதுக்கும் ரேசன் காடு வேணும் குடும்பம் வேணும்னு சொல்றாங்களே... ஏய்யா ஓட்டுப் போட உசுரு இருந்தா போதாதா?

33% இட ஒதுக்கீடு கொடுக்குறதுக்கு மூக்கால அழுவுற அரசாங்கம் எங்கள மாறி ஆளுகளுக்கு 1% ஆச்சும் கொடுக்குமா .. தேர்தல்ல நிக்க? என்னைய மாறி இருக்குற அக்காங்க எல்லாம் வீட்டையும் விட்டுத் தொறத்தி நாட்லயும் மதிக்காம...ஏன் ஒரு ஈன எண்ணம் எல்லாருக்கும்....? ஆடு, மாடு நாய் எல்லாம் வாழ்ற பூமில எங்கள மாதிரி அரவாணிக வாழக்கூடாதா நிம்மதியா?

வீட்ட விட்டு வெளில வந்த பத்தாவது நிமிசமே கிண்டலும் கேலியும் பண்றவன எல்லாம் பெத்தது ஒரு பொம்பளைதானே?
மனசுக்குள்ள தீவரமா நான் யோசிக்க நான் டெய்லி படிக்கிற நியூஸ் பேப்பர் உதவி பண்ணிச்சு....! எந்திருச்சு நின்னேன்... நல்ல வேளை..கையில வச்சிருருந்த பணம் இருட்ல அப்படியே சுருண்டு கிடந்துச்சு...

என்னதான் செய்யுது இந்த வாழ்க்கைனு பாக்குறேன்... மெல்ல என் ட்ரெஸ்ஸ சரி செஞ்சுகிட்டு பஸ்டண்ட் வந்தேன்.... ! சென்னைனு போட்டிருந்த பஸ்ல ஏறி டிக்கட் வாங்கிட்டு உக்காந்தேன்...! வண்டி எடுக்க டைம் ஆகும் போல......அசதில அப்டியே தூங்கிட்டு இருந்த என்னை யாரோ தட்டி எழுப்பி...ஏத்தா எங்க போறன்னு யாரோ கேட்டது காதுல விழுந்துச்சு....
பக்கத்துல என்னிய மாதிரியே ஒரு அரவாணி அம்மா...என் முகத்தையும் ட்ரஸ்ஸயும் பாத்துட்டு....." ஏன்டா கண்ணு... " என்னாச்சுனு கேக்கவும்......அம்மானு அவுங்கள கட்டிப் பிடிச்சு அழுதேன்........!

என் தலைய கோதிவிட்டு.... நாச்சியா நீ நல்லா இருப்ப மெட்ராஸ்தான் வர்ற வா.. நான் உன்னை பாத்துக்குறேன்...! இனிமே நீ நாச்சியா.. யாருக்கும் பயப்படாத...தைரியமா இரு.....நான் ஒரு டெய்லரிங் கட வச்சு இருக்கேன்....அங்கயே வேல பாருன்னு சொன்னாங்க. அவுங்களுக்கு தெரிஞ்சுருக்கும்தானே... என்னிய மாறி கஷ்டப்பட்டுதானே பொழச்சு வந்து இருப்பாங்க....

கும்பகோணத்துல இருந்து பஸ் கிளம்பி மெட்ராஸ் பக்கம் போய்ட்டு இருந்துச்சு....! விடிய ஆரம்பிச்சுருச்சு...உடம்பு எல்லாம் வலி எனக்கு. அந்த அம்மா தோள்ல சாஞ்சுட்டு.....இருந்தேன்..என் மனசு அமைதியா இருந்துச்சு... நம்பிக்கையோட...

இப்ப நான் முருகன் இல்லை நாச்சியா.......!

எழுதியவர் : Dheva.S (13-Dec-12, 11:49 am)
பார்வை : 386

மேலே