எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-42
தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் 42 -ஆவது படைப்பு...
தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்..... இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..
பரிந்துரைத்த தோழர் ஹூஜாவுக்கு நன்றி சொல்லுவோம்...
வாசித்து தோழர் நிலா சூரியனுக்கு வாழ்த்துகள் கூறலாம்..
!!!====(((வாடப் பிறந்தவர்கள்)))====!!!
ஓயாமல் உழைத்து
கொண்டிருக்கிறோம்;
எஞ்சியதெல்லாம் எங்களுக்கு
எச்சில் வறண்ட நாக்கும்
இழவெடுத்த பசியுமே...
எப்படியாவது
சேர்க்கத்தான் முயற்ச்சிக்கிறோம்;
சேர்வதென்னவோ எங்களுக்கு
பாழாய்ப்போன வட்டியும்
வாட்டிடும் வறுமையுமே....
என்றைக்காவது
சிரிக்கத்தான் நினைக்கிறோம்;
சிரிப்பதென்னவோ எங்களுக்கு
கேடுகெட்ட பொழப்பும்
வெடிப்புவிழுந்த உதடுமே...
ஒருநொடியாவது
உறங்கிடத்தான் கண்மூடுகிறோம்;
உறக்கமென்னவோ எங்களுக்கு
தூரத்து கானலாகவும்
துப்புகெட்ட கனவாகவுமே...
கஷ்டப்பட்டாவது
வாழ்ந்துவிடத்தான் துடிக்கிறோம்;
வாழ்க்கையென்னவோ எங்களுக்கு
எட்டாத கனியாகவும்
எமனோட உறவாகவுமே...
''வாழபிறந்தவர்களா... நாங்கள்..?
இல்லை! இல்லை!
வாட பிறந்தவர்கள் - வாழ்க்கையை
தேட பிறந்தவர்கள் - தேடலிலேயே
தேயப் பிறந்தவர்கள்...
இன்னொரு ஜென்மமென்று
ஒன்றிருந்தால்
வேண்டவே வேண்டாம்
இந்த
மனித பிறவிமட்டும்...!!!