நாளை உலகம் அழியுமாம் .... ( 21/12/2012 )

உலகம் பிறந்த நாளே தெரியாது
அழியும் நாள் மட்டும் அறிவோமா ?
நாம் இறக்கும் நாளும் நேரமும்
அறியாதபோது உலகம் அழியுமாம் !
பாசமும் நேசமும் இறந்துவிட்டது
பாரினில் பலருக்கு மறந்தே விட்டது !
பணத்தின் மதிப்பும் தெரியவில்லை
குணத்தின் அர்த்தம் புரியவில்லை !
மனிதம் பிறையாய் மறைந்து வருகிறது
மனிதன் குறையாய் அதனை நினைக்கவில்லை !
கொலையும் கொள்ளையும் நாளும் நடக்கிறது
நிலை மாறிய மனங்கள் நித்தம் இறக்கிறது !
வயது ஆகாமலே வரம்பை மீறுகின்றனர்
வயதானவரோ வாய்மூடி சிலையாகின்றனர் !
பெண்ணின் மானம் பேருந்தில் போகிறது
கண்ணீர் செந்நீராகி வருந்தச் செய்கிறது !
சுதந்திர மண்ணில் வன்முறையே வாழ்கிறது
கருவுற்ற தேசமோ கல்லறை ஆகிறது !
ஏழைகள் எண்ணிக்கை நாளும் ஏறுகிறது
ஏடும் எழுத்தும் நெருப்பாய் மாறுகிறது !
அரசியல் காற்றில் அரசே பறக்கிறது
அழியும் உலகமென உலகே நினைக்கிறது !
விஞஞான உலகில் விபரீதம் நடந்தாலும்
விந்தைமிகு உலகம் என்றும் அழியாது !
பகுத்து அறிந்திடும் பழக்கம் இருந்தால்
வகுத்து வாழலாம் வளமோடு நலமாய் !
மாயன் என்ற மாயை மனதில் மறைந்ததது
மனிதன் உள்ளவரை மண்ணில் பயமில்லை !
பெரியார் வாழ்ந்த மண்ணுக்கு பேரழிவு இல்லை
புரியாதார் என்றும் புலம்பத் தேவை இல்லை !
உலகம் நாமிருக்கும்வரை அழிவே இல்லை
உயிராய் உள்ளவரை உண்மையாய் வாழுங்கள் !
அவரவர் அவர்தம் வேலையை தொடருங்கள் !
அச்சம் தவிர்த்து அறிவை நம்பி வாழுங்கள் !
பழனி குமார்