என்று மடியும் இந்த அடிமை மோகம்
அடிமையின் மோகம்-அது
கொண்டலையுது தாகம்
அடிமைப்பட்டு, ஆளப்பட்டு
அதுவே பழக்கப் பட்டு விட்டது-இது
எப்போது நம்மிடையே மீளும்.?
=================================
குனிந்து பழகிய தலைகளும்
கும்பிடு போட்ட கைகளும்
தானாய் அடிமைப் படுவது
இன்னும் சில இடங்களில்
தவிர்க்க முடியாத ஒன்றாகவே
தடுமாறுகிறது.!
===============================
காலணிகள் கையணிகளாய்
தோள் துண்டு இடுப்புத் துண்டாய்
இடமாறிக் கிடந்த இருண்ட காலம்
நீங்கிய பிறகும் நீங்காமல் இருப்பது
வேற்றுமை எனும் வேதாளம்.!
=================================
உயர் படைப்பாய் மனித இனம்
படைத்திட்ட போதிலும்-இவனுள்
உயர்வென்றும் தாழ்வென்றும்
உரைத்துத் திரிவது உண்மையில்
உயர்வான இழி சிந்தனை.!
==================================
எப்போதும் யாரிடமாவது
அடிமைப் படுவதே நமது அவலம்
வெள்ளையனிடம் அடிமைப் பட்டோம்
அல்லல் பட்டோம்-அத்தோடு விட்டோமா?
அவன் கொள்கைக்கும் அடிமைப் பட்டோம்
========================================
பண்பாடு நாகரீகம் தொலைத்தோம்
அடையாளம் தொலைத்தோம்-இன்னும்
தடயங்களைக் கூட அழிக்கிறோம்
நம்மிடையே நம்மை நாமே தொலைக்கிறோம்
நம்மை அங்கே தேடுகிறோம்.!
==========================================
நுனி நாவில் ஆங்கிலம் செதுக்கி
உள் நாக்கிற்கும் உள்ளே தமிழை பதுக்கும்
உன் பற்று மெச்சத் தோன்றவில்ல-மாறாக
நகைக்கக் கூட முடியாது நாணத் தோணுது.!
==========================================
எங்கிருந்தும், எப்படி வந்தாலும்
எதையும் ஏற்று நிற்கும் உன் ஏற்புடமையால்
நீ குப்பைத் தொட்டியானாய்-அதனால்
துப்புக் கெட்டும் போனாய்.!
=======================================
அன்று அரசர்களால் அடிமை பட்டாய்
பின் ஆங்கிலேயர்களால் அடிமை பட்டாய்
இன்று அரசியல் வாதிகளால் அடிமை படுகிறாய்
அடிமைப் படுத்துதல் அறியா இனமென்பதால்
அடிமைப் படுவதில் ஆனந்தம் கொள்கிறாயோ?
============================================
உன் பெருமை உலகம் பேச புறப்பட-நீயோ
அடுத்தவன் பெருமையை பெரிதாய் பேசுகிறாய்
அறியாத இனமாய் இன்னும் நீயிருந்தால்
அடிமை மோகம் தணியாது போகும்
தமிழா.! தமிழா.!! தமிழா.!!!