ஒரு பிடி வருத்தங்கள்...
என்னைத்
தின்று செரிக்கத் துவங்கி இருக்கிறது...
உன் மீதான என் ப்ரியங்கள்...
வெறும் சமாதானங்களால்....
நீ நம் வாழ்வை
இட்டு நிரப்பத் துவங்கிய பிறகு.
நம் மௌனங்கள்....
பல அர்த்தங்கள் நிரம்பியவையாய்
ஆன பின்...
வெற்றுப் படுக்கைகள் நிரம்பிய...
குப்பைத் தொட்டியாகி விட்டது
நம் வீடு.
எதையும் தெரியாததாய்
காட்டிக் கொள்ளும்...
நம் இயல்பான நடிப்பை...
வழி தவறி...
நம் அறைக்குள் சிக்கிய
சிறு பூச்சியின் தேம்பல்கள்
அழிக்க முடிவதில்லை.
நாம் உருவாக்கியதாய் நம்பிய...
நமது நம்பிக்கைகள்...
சரிந்து கொண்டிருக்கிறது...
நாம் பறந்து திரிந்த
வானத்தின் விளிம்புகளிலிருந்து.
தூசி படிந்த உண்மைகளால்...
வாழும் நிலை பிறழ்ந்து....
அமைதியாய் இருக்கிறது
என் கூடு.
நாளை ஒருநாள்
என் மேல் மண் சரிகையில்...
உனது வருத்தங்களின் ஒரு பிடியும்...
விழ நேரிடலாம்...
நான் பூப்பதற்காக.