மகவொன்றாய் அவள் வந்திடணும் ...!
அமைதியின் சொரூபம் அவள்!
அன்புக்கு இலக்கணம் அவள்!
அவளைத் தான் காதலித்தேன்!
அடக்கமாக கரம் பிடித்தேன்!
இல்லறம் என்பது ஓர்!
நல்லறம் என்று அவள்!
சொல்லி தந்த பாடமது!
மெல்லியதாய் கேட்கின்றது!
அவளுறங்கி பார்த்தறியேன்!
அதிகாலை எழுந்திடுவாள்!
அன்றாட கடன் முடித்து!
அழகிய கோலம் இட்டு!
எனக்காக தேநீர் கொஞ்சம்!
எடுத்துகொண்டு வந்திடுவாள்!
என்னருகில் வந்தமர்ந்து!
எழும்புங்கள் என்றிடுவாள்!
கண்ணருகில் உறக்கமொன்று!
கலங்கிக்கொண்டு இருந்த போதும்!
கருணை முகம் பார்த்தவுடன்!
கவலை மறந்து போய் விடுமே!
பம்பரமாய் சுழன்று நின்று!
பணிவிடைகளும் செய்திடுவாள்!
பரிசாக மூன்று மக்கள்!
பத்திரையாள் எனக்குத் தந்தாள்!
உபசாரம் என்ற சொல்லின்!
உள்ளர்த்தம் இவளென்றால் !
உலகத்து மாந்தர் கூட!
உண்மை என்று சொல்லிடுவர்!
பூஜைகளும் விரதங்களும்!
பூவை அவள் செய்திடுவாள்!
பூமகள் போல அவள்!
பூமி போல பொறுத்திடுவாள்!
அகங்காரம் அவளுக்கில்லை!
அம்மன் போலிருப்பாள் அவள்! அத்தனையிருந்தும்!
அம்சமாகத்தானிருப்பாள்!
கஷ்டங்களில் கவலைகள்!
கண்ணீரை நானும் மல்க!
கண்டவுடன் மனமும் நொந்து!
கடிந்திடுவாள் என்னை அவள்!
நானொன்றும் சாகவில்லை!
நானிருக்க கவலை வேண்டாம்!
நாவாரச்சொல்லும் வேளை!
நான் மயங்கி போய் விடுவேன்!
வீட்டுக்கு வந்து நானும்!
சட்டென்று மாறிடாமல்!
பட்டவளை அழைத்து வந்து!
குட்டிக்கதை பேசிடுவேன்!
மனதிலுள்ள பாரமெல்லாம்!
மங்கையவள் புன்னகையில்!
மறந்திடும் மாயம் கண்டு!
மனம் மகிழ்ந்து போய்விடுவேன்!
சண்டையொன்றும் பிடித்ததில்லை!
சந்தேகம் கொண்டதில்லை!
சந்தோசமாக நாங்கள்!
சம்சாரி ஆயிருந்தோம்!
பாவியெவன் கண் பட்டதோ!
பாதியிலே போய் சேர்ந்தாள்!
பாசமதை நீங்கி நானும்!
பாரினிலே வாழ்கின்றேன்!
மகராசி அவள் போலே!
மண்ணுலகில் யாருளரோ!
மனதார வேண்டுகிறேன்!
மகவொன்றாய் அவள் வந்திடணும்...!

