தேவைப்பட்டதும் ....தேவைப்படாததும்.....
அழகாகப் பிறந்தாள்
எங்கள் வீட்டு
மகாலெட்சுமி!!
குலக் கொழுந்தே
குடும்ப விளக்கேஎன
கொண்டாடி மகிழ்ந்தோம்...
அவளுக்கு
மொட்டை அடிக்கும் போதும்
காது குத்தும் போதும்
நீராட்டு விழா நடத்தும் போதும்
மறக்காமல் தேவைப்பட்டது
சாதி வழக்கமும் பழக்கமும்!!
திருமண வயது வந்தது
எங்களின் தேவை அதிகமானது
தேடினோம் தேடினோம்
எங்கள் மகாலெட்சுமிக்கேற்ற
மணவாளனை!
எங்கள்
சாதி ஜனங்களிடமெல்லாம்
சொல்லி வைத்து தேடினோம்
எங்கள் சாதியிலே
எங்கள் உட்பிரிவிலே
பையன் தேவைப்பட்டதால்
தாமதமானது திருமணம்!
ஒருவழியாய்
முகூர்த்தநாள் வந்தது!
முறைப்படி முடிந்தது
முறைமாமன் சடங்கு!!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ...
எங்கள் சாதி ஜனங்களிடம்
மருமகன் பெருமையை
சொல்லி சொல்லி மகிழ்ச்சி!!
ஓராண்டு முடிந்தது
மெதுவாய் கரைந்தது
இன்பம்...
குழந்தைப்பேறு இல்லையென
மேற்கொண்ட சிகிச்சைகள்
உடலெங்கும் நிறைந்ததால்
எட்டிப் பார்த்தது துன்பம்....
ஐந்தாறு ஆண்டுகள்
கடந்தன...
எங்கள் தேவைகளெல்லாம்
விரைவாய் உடைந்தன....
எங்கள் குலமகள்
மலடியென அழைக்கப்படுவது
எங்கள் குலத்துக்கே அவமானம்!
உறுதி எடுத்ததால்
ஒதுங்கிக் கொண்டது
தன்மானம்!!
எம் குலமகளும்
தாயாகக் கிடைத்தது
எங்கோ ஒரு குப்பத்தில்
முறைதவறிப் பிறந்த குழந்தை...
இப்போது தேவைப்பட்ட
இந்த தேவைக்காய்
எப்பொழுதும் தேவைப்பட்ட
தேவைகள் தேவைப்படாமல்
தொடங்குகிறது "தத்தெடுப்பு"