அழிவிலிருந்து ஒரு விழிப்பு

இப்போது
நீங்கள் நிற்பது
கத்தியின்மேல் என்பதை
ஏற்க மறுக்கிறீர்கள்

உங்களை பல கூறுகளாக்க
வந்துவிட்ட கத்தியை
அடுத்த கட்டத்திற்கு
நகர்த்தும் பாலம் என்கிறீர்கள்

உங்களது
முன்னோக்கிய
பயணத்தின் வழியில்
ஏறாளமாய் திறக்கப்பட்ட
மனச் சலவை
அறைகளில்
இளைப்பாறிச் செல்கிறீர்கள்

இளைப்பாறுதலுக்கு
சன்மானமாய்
சொற்பமாய் இருந்த இயல்பை
இழக்கிறீர்கள்

அவசரக் கால்களும்
அனுகூலமற்ற பார்வையும்
மறுபடியான
வெற்றிடத்தை நோக்கிய
பயணத்திற்காய்
எஞ்சி நிற்கின்றன
உங்கள் இயல்பிற்குள்
என்பதை அறிய
மறுக்கிறீர்கள்

வாழ்வை
தேய்த்துக் கொண்டிருக்கும்
இயற்கையை
அழித்துக் கொண்டிருக்கும்
மானிடத்திற்கான
சவால்களாய் தோன்றும்.,

இந்த அவசரங்களும்
நவீனங்களும்
வேண்டாம் என்று
கூப்பாடு போடும்
என்னை பைத்தியம்
என்கிறீர்கள்

காட்டு மரங்களிடமும்
மலர்களிடமும்
பறவைகளிடமும்
விலங்குகளிடமும் ஆன
என் சகவாசத்தை
கொச்சைப் படுத்துகிறீர்கள்

ஆம்
உங்கள் பார்வையில்
எனது பயணம்
பின்னோக்கியதுதான்
நகைப்பிற்கு உரியதுதான்

ஆதியின் மீதியென
அமைதியின் பாலமென
முளைவிட்டுக் கொண்டிருக்கும்
என்னை.,

பழமையின் உறைக்குள்
பாயக் காத்திருக்கும்
பதுங்கிய வாளென்று
நீங்கள் நினைப்பது
சாபம்தான்

ஆடையற்ற உங்கள் ஊரில்
கோவணம் கட்டிய நான்
கோமாளிதான் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (17-Apr-13, 11:22 pm)
பார்வை : 85

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே