மூடு மந்திரம் 2(தொடர் கதை)

மழை குதித்தது. துளிகள் படபடத்தது. வெளியில் திடும் மென வரும் மழையில் சோர் விருப்பதில்லை..... சுழன்றடிக்கும் காற்றும் கை கோர்க்க நடுங்க வைக்கும் காட்சிகள் அரங்கேற தொடங்கியது.....இது விடாது என்றவர்கள் நனைந்த படியே வீடு நோக்கி ஓட, இந்தா விட்றும் என்றவர்கள் ஆங்காங்கே கடைகளில் ஒதுங்கி கொள்ள,அவர்களை வெளிச்சம் போட்டு காட்டியது மின்னல்... இப்போது விழுந்த இடி கண்டிப்பாக ஊர் கோடியில் ஏதாவது ஒரு மரத்தில் விழுந்திருக்கும்.... அல்லது ஏதாவது மாடுகளின் மேலோ, மனிதன் மேலோ விழுந்திருக்கலாம்... மனிதனின் கணிப்பு தப்புவதே இல்லை, நாஸ்டர் டெம்ஸ் ஐ படிக்கையில் தெரிகிறது.... தொடரும் மழையில் தொலைவதை தவிர வேறு வழியில்லை....
அது ஒரு மூன்று சாலைகள் சந்திக்கும் இடம். இப்படி வந்து அப்படி இப்படி போகும் பாதை.... அதுவே அப்படி இருந்து இப்படி வந்தால் அப்படியும் போகலாம்... அப்படியே வந்து இப்படி அப்படி எப்படியும் போகலாம்... கனத்து கொண்டேயிருந்தது மழை......
இது அடை மழையுமல்ல.... அந்தி மழையுமல்ல.....அவளின் மழை......ஒரு தோற்றுப் போன காதலன் எழுதி வைத்த கவிதை, அந்த பேருந்து நிறுத்தத்தின் சுவற்றில் கரைந்து கொண்டிருந்தது.....இந்த மழை காதலுக்கு எதிரியா...தோழனா....எப்போதும் ஒரே மாதிரியாக, எப்போதும் இருப்பதில்லை......மழைக்கு ஒதுங்கிய இரு சக்கர வண்டிகள், ஆங்காங்கே ஒளிந்திருக்க...எப்போதாவது பெரிய வண்டிகள் சாரலில் கோலம் போட்டபடியே போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தன....அதென்னமோ தெரியவில்லை....மழைக்குள் வண்டி ஓட்டும் பெரும்பாலான ஓட்டுனர்கள் மூக்கை சுழித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.....
கிரிச்.....ச் ................................................ச் ................................... அந்த ஆம்புலன்ஸ் கிட்டத்தட்ட ஒரு பக்கமாக ஏறி இறங்கியது...... பட் என ஒரு வெடிச்சத்தம். மயிலுக்கு தெரிந்து விட்டது..... கண்டிப்பாக அது டயர் வெடித்த சத்தமல்ல.....எற்று அவன் யோசிக்க யூகிக்க.....
அட...... ப்ரேக் போட கூட முடியவில்லை....கால் ப்ரேக்கை அழுத்தும் வினாடிக்குள் அந்த வெள்ளை சட்டை பேன்ட் போட்ட மனிதன் சட்டென சாலையின் பக்கவாட்டில் இருந்து நடு சாலைக்குள் இரண்டு கைகளையும் விசிறிக் கொண்டு விழுவான் என்று எப்படி தெரியும்.... இந்த விபத்தையெல்லாம் தவிர்க்கவே முடியாது....கால சக்கரத்தில் பின்னோக்கி சென்று வேண்டுமானால் ஆம்புலன்சின் ஓட்டத்திற்கான நேரத்தை மாற்றி அமைக்கலாம்......யார் கண்டது, அபோது ஒரு பேருந்து அந்த பக்கத்திலிருந்து வந்து அந்த வெள்ளை சட்டைகாரனை கொன்றிருக்கும்.....மொத்தத்தில் மரணம் ஏதோ சொல்கிறது.....அல்லது எதுவுமே சொல்வதற்கில்லை என்கிறது....
மயில்சாமி தட்டு தடுமாறி வெளியே வர, ஆங்காங்கே ஒளிந்து கிடந்த மனிதர்கள், நனையாமல் இருப்பதை தியாகம் செய்து ஓடி வந்து ஆம்புலன்சை சுற்றி வளைத்துக் கொண்டார்கள்....அவர்களில் ஒருவன் குபுக்கென்று திரும்பி வாந்தியெடுத்தான். ரத்த வாடையாம்... இப்போது குப்போலியன் வாடை பாடை கட்டியது.....
முடிஞ்சிருச்சுப்பா..... தலை நசுங்கிருச்சு..... ஆம்புலன்சுகாரங்களே இப்படி ஒட்டுனா.... கமெண்ட்ஸ் சொல்லும் பெரிய மனிதர்கள் அங்கும் சிதறியிருக்க.... மயில்சாமியின் கதறலோ.. கத்தலோ.... ஒரு நாயின் காதிலும் விழவில்லை....அதற்குள் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்ட கூட்டத்தை அந்த லேடி போலீஸ் தன் புஷ்டியான குரலால் கத்தி விளக்கி உள்ளே புகுந்து மயில்சாமியை காப்பாற்ற, அவன் நடுங்கியபடியே....வழிந்த ரத்தத்தை துடைக்காமலே.....
மேடம் நான்................சட்டென நினைவு வந்தவனாய்.... அய்யோ........... உள்ள............ உள்ள......உள்ள.....
அனகா....................................
தொடரும்
.