அச்சொல்லே பெருந்தீது............!
முதலெழுத்தின்
முழுமைபெறா வடிவமோ
மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒதுங்க
மூலையொன்று தேடியது ஒவ்வாமையில் !
மீண்டும்
மீட்சிபெறும் மையோ
சொல்லொன்றை நிரப்பிவிட்டதில்
சொல்லொண்ணா துயரத்தில் என் தாள் !
முன்னமே
முட்டி மோதிக் கொண்டன
தலைசீவக் கிளம்பும் கூர்வாள்கள்
தலைப்பினை மாய்க்கும் கடும்போட்டியில் !
கருப்பொருளின்
கசப்பினைக் கண்டதும்
கரகரத்துக் கொண்டே தயங்கியது
காரியம் கைகூடா என் எழுதுகோல் !
உணவருந்தாது
உடன் தொடர்ந்து படையெடுத்த
கரையான் கூட்டங்களோ தலையிலடிக்கக்
கருமியே வயிற்றிலடித்த குற்றமாய் சபித்தது !
தீனிக்குக் கூட
தீர உதவாத் தாளாய்
கேடினைச் சுமந்த பாவமோ
கேளாமல் கைமீறிப் போக முட்காயங்கள் !
கைப்பற்றிய
கைவிரல்களிடையே
குருதிக் கொப்பளிப்பு போராட்டம்
குரைக்கும் நாய்களுக்கோ ஊளையாட்டம் !
என்னவோ
எனக்கென்னவோ ஆகுமே
எண்ணமேயதை எழுதத் துடித்ததுவோ
எண்ணித் துணிந்த பெருந்தீச் செயலாமே !
இதோ
இடிந்தன வான கோட்டைகள்
இனிக் கையெடுத்த அவ்விழிவோ
இறந்தகாலத்தில் அழித்து திருத்தமாகுமோ !
விதியொன்றோ
விளக்கில் பட்ட விட்டிலாய்
இருண்டது கண்முன்னே ஜனனம்
இறுதி மூச்சில் ஊசலாடிய காரணம் “சாதீ” !