சாயம்போன வானவில்கள்................!
குற்றால அருவிகளைக்
குத்தகைக்கு எடுத்த விழிகள்
கொட்டித் தீர்த்த கதையும்
வற்றிவிடக் கண்டேன்
விடுகதை முடிவோடு !
எண்ண ஊஞ்சல்கள்
எனையன்றி ஆனந்தமாய்
ஆடித்திரிகையில்
பொறுப்பில்லா மறுப்பொன்று
இடறிவிட விபத்தானேன் !
கருப்புச் சரித்திரங்களே
கசக்கி எறியக்கூடிய
வெறுப்பினை ஏற்றேன்
செந்தழல் தீண்டியும்
வேகுமோ இந்த உள்ளம் !
இலையுதிர்க்காலமே
உன் விதிவரையறைக்குள்
முடிக்கப்படா கடமைக்காய்
என்னையும் மரமென்றாக்கி
தளிர்க்கனவுகள் உதிர்ப்பது சரியோ ?!
முட்டுக்கட்டைகளையும்
எரித்துச் சாம்பலாக்கும் குணமோ
பிறவியோடு பிறவியெடுத்தது
இங்கே விட்டுப் போன எதற்கோ
தனக்கே சிதைமூட்டியது !
வெளிச்சக் காடுகள்
தடவிக் கொண்டிருந்தன
இருட்டிவிட்ட வாழ்வுதனில்
தொலைந்து போனவொன்றோ
துடித்தே ஆகவேண்டுமாம் !
நீர் ஒட்டா
இலைகள் போலே
யார் ஒட்டவும் விரும்பாது
நழுவின நினைவுகள்
நகர்ந்தன தொய்ந்த நாட்கள் !
மின்பொறிகள் காட்டும்
அச்சுறுத்தல்களாய்
சிலவேளைத் தவிப்புகள்
அவ்வப்போது இப்படி
வேடிக்கைக்கு விநோதமானேன் !
அலட்சியத்தில் பலன் காணும்
சிந்தனைச் சிதறல்களிலோ
சாயம்போன வானவில்கள்
அதன் பொலிவுகானத் துடிப்பதோ
மடமையின் உச்சம் !
யாருமில்லாக் குகைகளில்
தன்னாட்சி நடத்தும்
வௌவால்க் கூட்டங்களே
இவ்வலியையும் கவ்வித்
தலைகீழாய்த் தொங்குவீராக !
********************************************************************
நண்பர் வினோத்கண்ணன் ஒருகாலத்தில் கொடுத்த தலைப்பு.இப்போது தான் அதற்கு விடிவு.நண்பர் வினோதன் எங்கிருந்தாலும் வாழ்க.(ஹஹஹா)