மனதுக்குள் பயணம்! (படித்ததில் பிடித்தது...)

மகிழ்ந்திருந்த இடங்களுக்கு
மறுபடியும் சென்றபோது
வாழ்ந்திருந்த நாட்களுக்குள்
மனதுக்குள் பயணம்.

அந்தப் பெயரில்லா
மரங்களின்கீழ்
ஒரு பெயரில்லா நானும்
நண்பர்கள் யாரும்
உடனில்லாமல்.

பச்சைப் பயிர்களைக்
கம்பளமாக்கிய காற்றும்
ஒரு இசைக்குழுவைப் போல்
மொத்தமாய் நடந்து சென்ற‌
வாத்துக் கூட்டமும்
இன்றும் மாறாமல்
காலம் அப்படியே நின்றதுபோல்.

வாத்துக்காரர்கள்
மாறியிருந்தார்கள்.

மனதுக்குள் மீண்டும்
அதே முகங்களும்
பழைய வாசங்களும்
மகிழ்ச்சியைத் தொலைக்காத நானும்கூட‌
இன்னும் யாரோ ஒரு
அன்னியன் போல்.

கூட்டுக்குள் திரும்பிய பறவைகள்
மகிழ்ச்சியில் கூவின.

மரங்கள் சொரிந்த பூக்கள்
என்னை விழிக்கச் செய்தன.

இன்றைய நனவுகள்
நாளைய நினைவுகளை
எழுதிக்கொண்டிருப்பதை
எனக்கு சொல்லாமல் சொல்லி.

எழுதியவர் : எஸ்.கே.பிரபாகர், ஐ.ஏ.எஸ். (21-Aug-13, 11:07 am)
பார்வை : 105

மேலே