வட்டமாய் சுற்றி வரும் ஆசை.

பார்த்து ஓர் இடத்தைத்
தெரிவு செய்து நாயும்
மூர்த்தி தலம் தீர்த்தம்
மூவுலகும் உள்ளது போல்
சுற்றிச் சுற்றி அவ்விடத்தை
வட்டம் இட்டுப் படுக்கும்.

தான் உண்ணத் தோதான
இரையினைத் தேடி வந்து
வானினின்று அவ்வுயிரை
வளைத்திட வேளை பார்த்து
சுற்றி வந்தே கழுகதுவும்
காத்திருந்து பிடிக்கும்.

நாமிருக்கும் இடமிதுவே
நல்லதென அறியாமல்
பறவைகளாய் விலங்குகளாய்
பாராததைப் பார்ப்பது போல்
ஊர் ஊராய் சுற்றிவர
ஆசை வந்து நெருக்கும்

இதுவரையில் யாதொரு
பதந்தொடா பாதையில்
பயணமது செய்வதாய்
சதமானதொரு வட்டத்தில்
சட்டென வாழ்வுமொரு
புள்ளியில் நிற்கும்.


எங்கே எது தோன்றுமோ
அங்கேயே துவக்குவதும்
நடந்தும் நின்றும் கடந்தும்
ஓடியும் உட்கார்ந்தும் ஒளிந்தும்
தங்காத உயிரிதுவோ
மண்ணிதிலே முடியும்.

அச்சினில் இவ்வுலகம்
அயராது சுழல்வதுவும்
செக்கினில் மாடுகள்
தளராமல் உழல்வதுவும்
சிக்கண வேதாந்தமென
வட்டமது உரைக்கும்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (12-Sep-13, 11:07 am)
பார்வை : 58

மேலே