மாட்டு வண்டி
மானுடத்தின் மாபெரும்
வாகன வார்ப்புகளுக்கெல்லாம்
தலையாய தலைச்சன் பிள்ளை
தரணி கழனிகளின் தத்துப்பிள்ளை
மாசுப்பட்டு மாசுப்பட்டு
காசநோய் கண்ட தேசத்தில்
மாசு தரா மருமகப்பிள்ளை
மாசில்லா மச்சினப்பிள்ளை
நாலடி பாதையிலே நர்த்தகி நடனமிட்டு
காடு விளைக்கும் பயிர்களையெல்லாம்
நாடு சேர்க்கும் நல்லப்பிள்ளை
நாட்டாமைகளின் கவுரவப்பிள்ளை
வியர்வை சிந்தும் விவசாயிகளின்
அயர்வை கலைய அனுதினமும்
அயராமல் உழைக்கும் அதிசயப்பிள்ளை
அவர்களின் தரம் உயர தான் உழைத்து
தன்னையே அர்பணிக்கும் அபூர்வப்பிள்ளை
பொதி சுமக்கும் போதினிலே
வலி எடுக்கும் கழுத்துக்கு
வலி மருந்து தடவச்சொல்லி
வர்புறுத்தல் இல்லை – ஏனெனில்
அது வாயிருந்தும் வாய்ப்பேசா
அய்ந்தறிவு ஜீவ முல்லை
வளர்ப்பவனின் வயிறு என்றும்
வரண்டு விடக் கூடாதென்று
வருத்தத்தோடு வாழுகின்ற
அர்த்தமிகு பிள்ளை – அதன்
வருத்தத்தைப் புரிந்துக்கொள்ளும்
அறிவு நமக்கு இல்லை
தான் என்ற கர்வத்திலே
தண்ணீப்போட்ட மயக்கத்திலே
ஊர் வம்பை விளைக்கு வாங்கும்
ஊதாரி பிள்ளைகளுக்கு..
ஊதக்காத்து ஆகாதென்று
உள் தாழிடும் எம்மக்கா..!
கொல்லைப்புர கோடியிலே
கொசுக்கடிக்கு மத்தியிலே
வாட்டியெடுக்கும் குளிரிலே
வெடவெடுக்கும் – அந்த
வாய்ப்பேசா வெள்ளந்திகளுக்கு..
காஷ்மீரத்து கம்பளி போர்த்த வேண்டாம்;
குறைந்த பட்சம் - நீங்கள்
வேய்கின்ற கூரையேனும்
அதன் வேதனையைப் போக்க வேண்டும்!
சொல் பேச்சுக் கேளாமல்
சோம்பேரி போர்வையோடு
நாலு சீட்டு ஆடுகின்ற
குல நாசக்கார பிள்ளைகளுக்கு
உச்சி வெய்யில் ஆகாதுன்னு
குளிர்ச்சி மோர் கொடுக்கின்ற
என் கூறுகெட்ட மக்கா...!
ஊனுருக உழைத்து உழைத்து
ஈடில்லா சேவை செய்யும்
அந்த வாயில்லா ஜீவன்கள்
அடைமழையில் நனைவதை தடுக்க
குடைப்பிடித்து நிற்க வேண்டாம்;
குறைந்தப் பட்சம்
தார்ப்பாலின் கூரையேனும்
தற்காலிகமாய் அமைக்க வேண்டும்!
மாட்டுவண்டிதானேயென்று மட்டம் தட்டாதீர்கள்;
மாண்புமிகு மாடகோபுர மாளிகை வாசிகளே..!
அதில் ஒருமுறை பயணித்துப்பாருஙகள்
நீங்களே ஆச்சரியம் அடையும்படியான
புது அனுபவத்தை ரசித்து அனுபவிப்பீர்கள் !
‘ஆடி’ முதல் ‘அய்10’ வரை
ஆயிரத்தெட்டு மாதிரி வாகனங்கள்
மானுட வீதிகளில் வலம் வர
போட்டாப் போட்டி போட்டாலும்
அன்று முதல் இன்று வரை
போட்டியே இல்லாத ஒரே வண்டி
நம்ம ஊரூ மாட்டு வண்டிதான்!