எண்ணிப் பார்த்திங்கே எல்லாம் காத்திடுவோம்.

வடக்கு தெற்கென்னும் துருவங்கள் இடையே
படக்கென அடித்துத் துடிக்கின்ற உயிர்கள்
கடக்கின்ற கோளிதிலே ஐந்துவகை ஆகும்
நடக்கின்ற விலங்கினம் அவ்வைந்தில் ஒன்றாம்.
சின்ன செல்கொண்ட சிற்றுயிர்கள் முதலாய்
முன் நீட்டும் நா மட்டும் யானையினும் பெரிதாய்
தன்னொப்பு இல்லாத டைனோசார் போலிங்கு
புரியாதப் புதிராக பத்துலட்சம் வகைகள்.

கட்டைவிரல் அளவுடைய கானக் குருவியுடன்
தட்டையாய் நீண்டிருக்கும் நூறடி நீலமீனும்
எட்டிநடை போடுமந்த விலங்கின அரசாட்சியிலே
பட்டையது தீட்டிய வைரமாய் பலவண்ணம்;.
வண்ணமும் வடிவமும் வேறு் வகையினிலே
எண்ணமதைக் கொள்ளை கொள்அழகினிலே
திண்ணியமாகத் துலங்கும் உண்மையது
மண்ணிதிலே மங்காத ஒளிமிக்கக் காட்சி.

பேரண்டம் அதிலே மிதக்கும் கோளென்று
பேரன்பு கொண்டே பிரம்மன் படைத்தான்
நாலாயிரங்கோடி ஆண்டுகள் முன்னே
நானிலம் அறியாமல் உயிர்கள் தோன்றினவே;
உயிர்கள் உலகின் உயர்வான இடங்கட்கு
பயிலாத நிலங்களில் பரிதவித்துப் பயணித்து
கயிறாக நீளுமிக் கோளத்தில் பலமூலை
அயிராவதம் போலே ஆடியோடினவே.

நீரிலும் நிலத்திலும் வாழுவகை தானறிந்து
இரண்டிரண்டாய் இமயம் வரை சென்றும்
வேருடன் அடக்கியாள வந்த மனித இனம்
நாரியுடன் நரனாகப் பெருத்துப் பலுகியதே;.
ஆப்பிரிக்கக் கண்டமதில் ஆரம்பம் கொண்டு
சாப்பிடும் சோறுக்கென ஆழியிலும் வானிலும்
தேடி வெற்றி கண்ட தெய்வத் திருமனிதர்
மூடிய நிலவதிலும் முதல் கால் பதித்தார்.

அரிய சாதனைகள் மனிதர் செய்திடினும்
புரியும் விலங்கினத்தில் தாமோரினமென்று
பெரிய புவியிதில் இயற்கை வளங்களுடன்
சரியொத்து வாழ்வதே சமர்த்தென அறிவார்
நீலக் கடல்களிலும் சமுத்திர ஆழத்திலும்
வீழும் அருவிகளில் வாழும் உயிரினங்கள்
சீலம் குறையாமல் சிறகடித்துப் பறப்பவை
கோலம் நிறைந்த நற்கோளிது நம்பூமி.

படைப்புப் பொருளாகப் படைக்கப் பட்டாலும்
உடையது அணி்யாது உல்லாசமாய்த் திரியும்
நடப்பன ,ஊர்வன, பறப்பன தாவரமும்
இடம்பெற வாழுவது இயற்கைக் கொடையாகும்;
மனிதர் என்றாலே மனிதமும் கருணையதும்
மண்ணும் அதனூடே வெளிப்படும் குண நலனும்
எண்ணிப் பார்த்திங்கே எல்லாம் காத்திடுவோம்
கண்ணிய மனிதர்க்கு இக்கடமை முதலாகும்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (20-Sep-13, 12:47 pm)
பார்வை : 44

மேலே