!!!===(((இருண்ட ஈழத்திற்கு உரிமையொளி அவசியம்-3)))===!!!

புலிகளை அழித்துவிட்டோம் இனி தமிழ் மக்கள் தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொடுத்து வந்துவிடுவார்கள் என்று எண்ணி இருந்த இலங்கை அரசின் ஆணவ முகத்தில் கரியள்ளி பூசி இருக்கிறார்கள் தமிழ் மக்கள், இந்த தேர்தலில் இலங்கை அரசு தந்த இடர்பாடுகளையும் இன்னல்களையும் தாண்டி, ஆளும் அதிகார அரசுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து, இலங்கை அரசை நாங்கள் விரும்பவில்லை என்பதையே வெளிபடுத்தி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

இந்த தேர்தலின் முடிவுதான் மக்களின் முடிவு என்பதை பன்னாட்டுச் சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும், எந்த ஒரு நாடகத்தையும் அரங்கேற்றி தமிழ் மக்களை தன்வசப்படுத்த இலங்கை அரசால் ஒருபோதும் இயலாது என்பதை இந்த தேர்தலின் முடிவு நமக்கு உணர்த்துகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நியாயமான ஜனநாயக ரீதியாக ஆட்சியைப் பெற்று தந்து இருக்கிறார்கள் நம் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை நிறைவேற்றித் தர பாடுபட வேண்டியது மிக அவசியமாகும், மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள் ஒரு முடிவை வைத்துகொண்டு அதற்காக செயல்படுவதைவிட மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை நிறைவேற்றும்வகையில் தங்கள் ஜனநாயக அரசியல் நகர்வை முன்னெடுப்பதே சாலச் சிறந்ததாகும்.

சமஸ்டி ஆட்சியை நாம் வரவேற்கிறோம் அதே வேளையில் சுதந்திரமான முழு சுயாட்சி அதிகாரமில்லாத சமஸ்டி ஆட்சியை ஒருபோதும் நாம் ஏற்றுகொள்ளக் கூடாது.

ஜனநாயக ரீதியாக மக்களால் அங்கிகரிக்கப்பட்ட இந்த தேர்தலின் அழுத்தமான முடிவானது உலக நாடுகளை நம் பக்கம் திருப்பி இருக்கிறது, இந்த வாய்ப்பை நழுவவிடாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது உச்சகட்ட அழுத்தமான கோரிக்கைகளை அடைய வேண்டும் என்பதே எமது ஆவலாக இருக்கிறது.

இலங்கையை ஆளும் சிங்கள இனவெறி அரசை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதை ஜனநாக முறையிலேயே மக்கள் கூறிவிட்டார்கள், இதைவிட அழுத்தமாக கூற வேறு வழி இல்லை என்பதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும், எப்பொழுதும் எம் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத உலக சமுதாயம் இனியாவது புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம்.

தமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் நம் மக்கள் இழக்ககூடாததை எல்லாம் இழந்துவிட்டு நிராயுதபாணிகளாய் நிற்கிறார்கள், இந்த சூழலில் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்து, அவர்களை சுதந்திரமாக சுயமரியாதையோடு வாழ வைக்க வேண்டியது உலக ஜனநாயக சமுதாயங்களின் கடமையாகும்.

இந்த தேர்தலின் முடிவு சாதாரணமானது என்று எவரும் அலட்சியப் படுத்தகூடாது, இதுவே நம் மக்களின் ஆழமான உள்ளுணர்வு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தாயகம் மற்றும் புலம்பெயர்ந்து மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தங்களது அரசியல் கொள்கைகளை வலுவாக்கி அதை அடையும் முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும், சமஸ்டி ஆட்சி நம் மக்களுக்கு தீர்வு தராது என்றால் அதைவிட வலுவான கோரிக்கைகளை அடைய போராட வேண்டும்.

ஆளும் அரசை ஆதரிக்கும் பல நாடுகளின் கட்டாயத்திற்காக வலுவிழந்த அதிகாரங்களை ஏற்பதை கைவிட வேண்டும், ஆட்சி கிடைத்தால் சரி என்று எண்ணிவிடாமல் உரிமை கிடைக்குமா என்று எண்ணிப் பார்ப்பதே நம் மக்களுக்கு நாம் செய்யும் தியாகமாகும்.

உலக நாடுகள் நம்மை பார்த்துகொண்டு இருக்கும் இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால் பிறகு ஒன்றும் செய்ய முடியாது, தமிழீழத் தாயகம் என்ற உச்சக்கட்ட கோரிக்கையை முன்வைத்து வலுவான அதிகாரங்களை பெற்று ஆட்சி அமைப்பது ஒரு ராஜதந்திரம், ஆனால் சமஸ்டி என்ற வலுவிழந்த கோரிக்கையை முன்வைத்து, வலுவிழந்த ஆட்சியை அமைக்க அடித்தளமிடுகிறது தமிழ் தேசியகூட்டமைப்பு என்றேத் தோன்றுகிறது.

ஏனென்றால், நிச்சயமாக வலுவான சமஸ்டி ஆட்சி அமைப்பதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது, அது சமஸ்டியை வலுவிழக்கச் செய்தே நமக்களிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே சமஸ்டி ஆட்சி மறுக்கப்பட்டதால்தான் தமிழீழ தாயகத்திற்கான போராட்டம் முளைத்தது, இம்முறையும் மறுக்கப்பட்டால் தமிழ் தேசிய கூடம்மைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

''நிலையானத் தீர்வும், நிரந்தரமானத் தீர்வும், தமிழீழத் தாயகமே''...!


-------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (24-Sep-13, 12:28 pm)
பார்வை : 60

மேலே