தமிழ் அந்தாதி ......!!
செம்மொழி யான தொன்மை மொழியாம்
செந்தமிழ் மொழிக்கிணை தரணியில் இல்லை ...!!
இல்லை எனாமல் பொதிந்துக் கிடக்கும்
இலக்கண வளமும் இலக்கிய வளமும் ....!!
வளமுடன் கவிகள் பூத்துக் குலுங்கும்
வரமதைப் பெற்ற தமிழ் பூஞ்சோலை ....!!
பூஞ்சோலை தவழும் தென்றல் காற்றும்
பூந்தமிழின் மணத்தைப் பரப்பிச் செல்லும் ....!!
செல்லும் வழியில் மூச்சுள் கலந்து
தமிழின் இனிமை இதயம் நிறைக்கும் ....!!
நிறைந்த உள்ளம் பொங்கிப் பெருகி
கவிதைகள் பலப்பல நாளும் படைக்கும் ....!!
படைக்கும் பிரம்மனே அசரும் விதமாய்
தடையின்றி செவியில் தமிழமுதம் பாயும் ..!!
பாயும் நதியில் துள்ளிடும் மீன்களாய்
பருகிக் களிக்கும் தமிழன் உள்ளம் ....!!
உள்ளம் குளிர உவகையில் பிறக்கும்
உன்னதப் படைப்பில் உளம் பூரிக்கும் !
பூரித்த நெஞ்சம் ஆசிகள் வழங்க
பூலோகம் வெல்லும் தமிழெனும் செம்மொழி ....!!!