கண்ணே என் கண்மணியே .......!கண்ணீரின் தாலாட்டு!

கண்ணே என் கண்மணியே!
கருவறையின் கற்பகமே!
பொன்னே பொன்மலரே!
பொக்கிஷத்தின் உறைவிடமே!
பாலகன் உனை நினைத்து !
பாடுகிறேன் தாலாட்டு!
கண்மணி அதை கேட்டு!
கண்மூடி நீ தூங்கு!

பஞ்சணையில் உனை அமர்த்தி!
பழம், பாலும் தந்திருந்தேன்!
நிலவொளியில் உனை வைத்து!
நிலாச்சோறு ஊட்டிவிட்ட்டேன் !
பொற்பதமும் நடந்து வர!
பொன்னலே வீதி செய்தேன்!
வீதியிலே நீ நடந்தால்!
வீர முழக்கம் கேட்க செய்தேன்!
தேராய் நீ உலா வர!
தேவர்களும் வாழ்த்தினரே!

நோயின்றி நீ வாழ!
நோன்பு பல நோற்றிருந்தேன்!
கடவுள்கள் உனைக்காக்க!
கண்மூடி தவமிருந்தேன்!
வானத்தை மெத்தையாக்கி!
வானவனே தூங்க வைத்தேன்!
மேகத்தை போர்வையாக்கி!
மேனியெல்லாம் போர்த்திடுவேன்!
சலனமின்றி நீ தூங்க!
சாமரங்கள் வீசி நின்றேன்!

தூயவன் உனை காக்க!
தூங்காமல் விழித்திருந்தேன்!
விடியலில் எழுவாயென்று!
விடியுமுன்னே நானெழுந்தேன்!
விடிவெள்ளி நீ தூங்க!
விடியாமல் போனதென்ன?
கதிரவன் விழிக்குமுன்னே!
காணாமல் போனதென்ன?
கண்மணி நீ எழும்பாமல்!
கண்மூடி கிடந்ததென்ன?

மாமனென்று நீ நினைத்து!
மார்போடு அணைந்தாயோ?
மாயவர்கள் உனையழத்து!
மாய்த்திடவே நினைத்தனரோ?
தோற்றாவர்கள் போவாரென்று!
தோட்டாவால் துளைத்தனரோ?
தங்கமே உனை அவர்கள்!
தகரமென்று நினைத்தனரோ?
தரணியாள வருவாயென்று!
தயவின்றி வீழ்த்தினரோ?

கோமகனே நீ தகர்ந்து!
கோபுரமாய் வீழ்ந்தாயோ?
ஆழிகரை அன்னைதனின்!
அரவணைப்பில் சென்றாயோ?
அவனியெல்லாம் அழுதிடவே!
ஆண்டவனும் அழைத்தானோ?
மறுபிறவி எடுத்தேனும்!
மறுபடியும் வருவாயா?
மங்கையிவள் மடியினிலே!
மகனாகப் பிறப்பாயோ?

எழுதியவர் : SAHANA (30-Sep-13, 11:21 pm)
பார்வை : 427

மேலே