அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக
அண்ணன்களின்
ரகசியமறிந்தவர்களாக
தங்கைகளே இருக்கிறார்கள்...
மணல் வீடு கட்டவோ
கட்டியதை இடிக்கவோ
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...
நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...
அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...
'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...
அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...
தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது
தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்...
அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...
அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...
தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...
திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்..