தாத்தாவின் ஆணி
தன்னம்பிக்கையை
எழுதி எழுதித்
தேய்ந்திருந்த
தாத்தாவின் ஆணி
எப்போதும்
தலைகுனிந்தே நின்றது
மையைத் தின்று
வாழ்க்கையைக்
கக்கும் கருவிக்கு
சால்வையும் சும்மாடும்
தோள்சுமையென்றவன் தாத்தா
எவனாகவும் அடையாளப்படாத
எவனாகவும் அறியப்படாத
எவனுக்கும் அடங்க மறுத்த
தேசாந்திரிக்கு
ஊர்கூடிக் கூறியது
இந்திரியக் குறைபாடென்று
தடுக்கி விழுந்து
தாத்தா மரணித்த நாளில்
முட்டிய கண்ணீரை
முந்தானையில் மறைத்த
பொன்னம்மாக் கிளவி
பத்திரப்படுத்திக்கொண்டாள்
ஆணியையும் ஏடுகளையும்
– மன்னார் அமுதன்