இரவுகள் விட்டுச் சென்றவள்

வெற்றுக் காரணமெனும்
மழுங்கிய கத்தியால்
வெகு நிதானமாக அறுக்கிறாய்.
கெஞ்சிக் கதறுகின்றது,
என் காதல் கயிறு.

நீ திருத்துவதற்காக
நான் வேண்டுமென்றே
விட்டுச் சென்ற
சிறு சிறு பிழைகள்,
உன் நினைவுறுத்தல்களில்
பெரும்பாவமாகின்றன.

உனக்கான காத்திருப்பில்
மின்னலென மறைந்த
பலமணித்துளிகள் - இன்று
ஒட்டுமொத்தமாக மீண்டு
நொடிகளை நகர்த்த மறுக்கின்றன.

நமது நீண்ட மெளனங்களை
உண்டு வளர்ந்த
தேநீர்ச்சாலை மலர்கள்
என் தனிமைக் கண்ணீரில்
கருகிக் கொண்டிருக்கின்றன.

உன் அருகாமைகளில்
தொலைத்து விட்டிருந்த எனது
வாழ்க்கைச் சூனியங்கள்,
நீ பிரிந்த நாளில் , என்னை
சூழ்ந்து கொண்டுவிட்டன.

வெற்றுச் சுமையென்று நீ
உன்னிலிருந்து வெளியேற்றிய
என் இதயம் - உன்
அனுதினப் பழக்கங்களை
நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

நீ திருப்பிக்கொடுத்த
என் காதல் கவிதைகளில்,
எப்படித் தேடியும்
கிடைக்கவில்லை - அதில்
நிரப்பப் பட்டிருந்த எனதுயிர்.

கனவினில் மட்டும் காணென்று
நீ விட்டுச் சென்ற
இரவுகளை-
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
அழுவதற்காக.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (6-Dec-13, 3:01 pm)
பார்வை : 167

மேலே